மதுரையில் விழிப்புணர்வு செஸ் போட்டி | கலெக்டர் துவக்கி வைத்தார்
Awareness Chess Tournament in Madurai | Collector inaugurated

தமிழகத்தில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியையொட்டி மதுரை மாவட்டத்திற்கு வருகைதர உள்ள செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் (18.07.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஸ் சேகர் மதுரை நாய்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற செஸ் போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற 28-தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செஸ் போட்டிகள் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், மதுரை மாவட்டத்திற்கு வருகின்ற ஜூலை 25-ஆம் தேதி ஒலிம்பியாட் ஜோதி (Olympiad Prestigious Torch) வருகை தர உள்ளது. இதனை சிறப்பான முறையில் வரவேற்கும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், இன்றைய தினம் மதுரை நாய்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற செஸ் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஸ் சேகர் தொடங்கி வைத்தார்.
மேலும், இந்த நிகழ்வின் போது செஸ் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் செஸ் காய்கள் போல வேடம் அணிந்து ஆர்வமுடன் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்ட மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
இந்த நிகழ்வுகளின் போது, மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், நாய்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜாக்லின் உட்பட பலர் உடனிருந்தனர்.