
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (17.08.2022) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.அமுதா தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் முன்னிலையில் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் திருமதி.பி.அமுதா தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசு பொதுமக்கள் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமை உணர்வுடன் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கில் சமத்துவபுரம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் 11 சமத்துவபுரங்கள் உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக 6 சமத்துவபுரங்களில் உள்ள 597 குடியிருப்புகளில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் 226 குடியிருப்புகளில் மராமத்துப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதேபோல, சமத்துவபுரங்களில் உள்ள சமுதாய கூடங்கள், பள்ளிக் கட்டடங்கள் ஆகியவற்றை சீரமைத்தல் உள்ளிட்ட 165 பொது உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் அனைத்தையும் வருகின்ற அக்டோபர் மாதம் இறுதிக்குள் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். மேலும், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் இதுவரை 2,13,476 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 2022-2023-ஆம் நிதியாண்டில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், பள்ளி உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல், பசுமை மற்றும் சுத்தமான கிராமம், சமுத்துவ சுடுகாடு, இடுகாடு மேம்பாடு உள்ளிட்ட 597 பணிகள் ரூ.3273.85 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதவிர ஊரக பகுதிகளில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம், தெருவிளக்கு வசதிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டம், வீட்டுவசதி திட்டம், நமக்கு நாமே திட்டம், கிராம சாலைகள் மற்றும் பாலங்கள் திட்டம் போன்ற திட்டப் பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி பணியாற்றிட வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.அமுதா தெரிவித்தார்.
முன்னதாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.அமுதா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் ஆகியோர் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்பட்டி ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்துப் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள்.
குடியிருப்புகளின் மராமத்துப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த நிகழ்வுகளின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி.இந்துமதி அவர்கள், மாவட்ட திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) எம்.காளிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எஸ்.சதீஷ்பாபு, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் எஸ்.அரவிந்தன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.