
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கீழ மாசி வீதி மற்றும் வடக்கு மாசி வீதிகளில் சாலைப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தமிழ்நாடு உணவுப்பொருட்கள் வியாபாரிகள் சங்க அலுவலக கட்டிடத்தில் உணவுப்பொருட்கள் வியாபாரிகள் சங்கம், சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் ஆணையாளர் விசாகன் தலைமையில் (27.01.2021) நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் நான்கு மாசி வீதிகளில் ஸ்மார்ட் சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 24 மணி நேரம் குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்கு புதிய குழாய்கள் அமைத்தல், பாதாள சாக்கடை குழாய்கள் பதித்தல், இருபுறங்களிலும் நடைபாதையில் மழைநீர் வடிகால் அமைத்தல், தரைவழி மின்வயர் மற்றும் கேபிள் வயர்கள் செல்வதற்கு தனி வழி அமைத்தல் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டு தெற்குமாசி வீதி மற்றும் மேல மாசி வீதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
தற்போது கீழ மாசி வீதி மற்றும் வடக்கு மாசி வீதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட உள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையிலும், வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பணியினை விரைந்து மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் கீழ மாசி வீதி மற்றும் வடக்கு மாசி வீதிகளில் வியாபாரிகளின் கோரிக்கையின் அடிப்படையில் இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் சரக்குகள் இறக்குவதற்கு வசதியாக காலை நேரங்களில் மட்டும் பகுதி பகுதியாக சாலைப்பணிகள் மேற்கொள்ளவும், மார்ச் இறுதிக்குள் இரண்டு மாசி வீதிகளிலும் சாலைப் பணிகளை முடிப்பது எனவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் போக்குவரத்து காவல் துறையினர் மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்லுவதற்கு வசதி செய்யுமாறும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுகுமாரன், காவல் உதவி ஆணையாளர் திருமலைகுமார், தமிழ்நாடு உணவுப்பொருட்கள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயபிரகாசம், நகரப்பொறியாளர் அரசு, ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக்குழுவை சார்ந்த சக்திவேல், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவிப் பொறியாளர்கள் சந்தனம், கந்தப்பா, திருப்பதி உட்பட மாநகராட்சி அலுவலர்கள், தமிழ்நாடு உணவுப்பொருட்கள் வியாபாரிகள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.