
மதுரை எல்லிஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் (18.06.2022) நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பாக “தொழிலணங்கு” என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த உறுப்பினர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் நோக்கில் நடத்தபட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-
திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. தத்துவமும், கொள்கையும் எவ்வளவு முக்கியமே அந்த அளவிற்கு செயல்திறன் மிக முக்கியமானது, 23 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சுய உதவி குழுக்கள் இடையே ஏற்ற தாழ்வு இருக்கிறது.
சில இடங்களில் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. சில இடங்களில் அவ்வாறு இல்லை. சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையை முன் மாதிரியாக கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு திட்டங்கள் கொண்டு வர உள்ளோம்.
மதுரையை தொடர்ந்து தமிழகம் முழுதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பாடுகளை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த 30 ஆண்டுகளாக வெளிநாடுகளில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து இருக்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசு, மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சமுதாயம் வளரும் என்பதை உணர்ந்து, அதற்கான திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம் என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன்பேசினார்.
நிகழ்வில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யப்படும் பால் காளான், மஞ்சள் பை, கடலை எண்ணெய், மசாலா பொருட்கள், புடவை, அப்பளம் ஆகியவைகளை கொள்முதல் செய்வதற்கான நிறுவனங்களின் விருப்ப கடிதங்கள் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்,
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஸ் சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் கஹ்லோன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் , வாழ்ந்து காட்டுவோம் திட்ட முதன்மை செயல் அலுவவர் அருள்ஜோதி அரசன் உட்பட அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.