
மதுரை பசுமலை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் குமரேசன் என்பவரது மகன் சரத்குமார் (22) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தன்னிதுரை என்பவரது மகன் கார்த்திக் (20) என்பவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பூனையை பிடித்து உண்பதில் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
கார்த்திக்கை ஏற்கனவே, சரத்குமார் குடியிருக்கும் பகுதிக்கு பூனை பிடிக்க வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி கார்த்திக் தனது நண்பர் தெய்வம் என்பவருடன் சேர்ந்து சரத்குமார் குடியிருக்கும் பகுதிக்குச் சென்று பூனையை பிடிக்க முற்பட்டுள்ளார்.
அப்போது சரத்குமாருக்கும் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் தெய்வதுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் கார்த்திக் மற்றும் தெய்வம் ஆகிய இருவரையும் சரத்குமார் தகாத வார்த்தையில் திட்டியதால் இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கார்த்திக் மற்றும் தெய்வம் ஆகிய இருவரும் மது அருந்திவிட்டு மீண்டும் சரத்குமார் குடியிருக்கும் பகுதிக்கு வந்து சரத்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குடிபோதையில் இருந்த கார்த்திக் மற்றும் தெய்வம் ஆகிய இருவரும் சரத்குமாரிடம் வம்பு இழுத்து., கார்த்திக் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரத்குமாரை தாக்க முற்பட்டுள்ளனர்.
அதில் சிறு காயங்களுடன் தப்பித்த சரத்குமார் வெட்ட வந்த கார்த்திகேயனை தடுத்து நிறுத்தி கார்த்திக் கொண்டு வந்த கத்தியை பிடுங்கி அவர் தலையிலேயே சரத்குமார் வெட்டியுள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த கார்த்திக் கீழே விழ ரத்த வெள்ளத்தில் மிதந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை செய்ததில் அப்பகுதியில் பூனையைப் பிடித்து உன்பதில் இருவருக்கும் நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாகவும், தற்போது யார் பகுதியில் உள்ள பூனை பிடிப்பது என்ற வாக்குவாதத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து., ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த திருப்பரங்குன்றம் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். காயமடைந்த கார்த்திக் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சரத்குமாரை தற்போது முதற்கட்டமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவுடன் கார்த்திக்கு கைது செய்வதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் தப்பித்தது பூனை என்பது குறிப்பிடத்தக்கது.