
மதுரை, நத்தம் சாலை பகுதியில் உள்ள மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் (27.08.2022) தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், தேனி மாவட்ட கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தேசிய அளவிலான நாட்டின நாய்கள் வளர்ப்பு கருந்தரங்கம் மற்றும் நாட்டின நாய்கள் கண்காட்சியினை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் நாட்டின நாய்கள் தமிழர்களின் வாழ்வியலுடன் இணைந்து பயணம் செய்பவை. நாட்டின நாய்கள் குறித்து பொதுமக்கள் முழுமையாக அறிந்த செயல்பட்டால் அவற்றை சிறப்பாக பராமரிப்பதற்கும் லாபகரமான பண்ணை தொழில் வாய்ப்பாகவும் அமையும்.
அந்த வகையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், தேனி மாவட்ட கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக மதுரை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் தேசிய அளவிலான நாட்டின நாய்கள் வளர்ப்பு கருந்தரங்கம் மற்றும் நாட்டின நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியில் கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம் உட்பட 250-கும் மேற்பட்ட நாட்டின நாய்கள் பங்குகேற்றன. குட்டி, இளம் பருவம் மற்றும் வளர்ந்த நாய்கள் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நாய்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நாட்டின நாய்களுக்கு பரிசு கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கண்காட்சியின் ஒரு பகுதியாக நாய் வளர்ப்போர் பயன்பெறும் பொருட்டு தேசிய அளவிலான நாட்டு நாய் வளர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் நாட்டின நாய்கள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் நாட்டின நாய்களின் உடல் நல பராமரிப்பு இனப்பதிவு சான்று பெறுவதற்கான விதிமுறைகள் இனப்பெருக்க மேலாண்மை உத்திகள் நாய்கள் மற்றும் மனிதர்களைப் பாதிக்கும் வெறி நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம், துணை வேந்தர் முனைவர் க.ந.செல்வக்குமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம், பதிவாளர் முனைவர் பா.டென்சிங் ஞானராஜ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம், முதல்வர் முனைவர்.பி.என்.ரிச்சர்டு ஜெகதீசன் துணைமேயர் தி.நாராஜன், மண்டல தலைவர் அ.சரவண புவனேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.