
தியாக சீலர் கக்கன் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு (18.06.2022) மேலூர் தும்பைப்பட்டி கிராமத்தில் உள்ள அன்னாரது மணிமண்டபத்தில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தியாக சீலர் கக்கன் அவர்கள் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில் 18.06.1908-அன்று பிறந்தார். பள்ளி மாணவப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு அமைச்சராகவும் பொறுப்பு வகித்து மக்களுக்கு சேவையாற்றியவர்.
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அவர்தம் பிரதிநிதியாக தொடர்ந்து பாடுபட்டவர். தியாக சீலர் கக்கன் அவர்களின் சேவையை போற்றி கவுரவித்திடும் விதமாக தும்பைப்பட்டி கிராமத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் மணிமண்டபம் 13.02.2001-அன்று திறந்து வைக்கப்பட்டது. மேலும் அன்னாரது பிறந்த நாளான ஜூன்-18 ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்றைய தினம் மேலூர் தும்பைப்பட்டி கிராமத்தில் உள்ள அன்னாரது மணிமண்டபத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிர்தோஷ் பாத்திமா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.