
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (08.07.2022) தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் (ஓய்வுபெற்ற நீதிபதி) பி.ஆர்.சிவக்குமார் தலைமையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தொடர்பான அறிமுகம் மற்றும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களை சார்ந்த தொண்டு நிறுவன உறுப்பினர்கள், அரசு வழங்கறிஞர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் (ஓய்வுபெற்ற நீதிபதி) திரு.பி.ஆர்.சிவக்குமார் அவர்கள் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு அதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசிய அளவில் பட்டியல் இனத்தவர் நல ஆணையம் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் ஆணையம் அமைத்திட வேண்டும் என்று நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியினர் சமுதாயத்திற்காக பாடுபடக்கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு அரசியல் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக சரியான தீர்வு காணாமல் தொடர்ந்து நிலுவையிலேயே இருந்து வந்தது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு நடைபெற்ற முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேய, மாநில அளவில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுடைய பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காணவும் ”தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்” என்ற புதிய அமைப்பு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கப்படும் என அறிவித்தார்கள்.
அவ்வாறு அறிவித்ததோடு மட்டுமல்லாமல் உடனடியாக அதனை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும், ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகளவில் நடைமுறையில் உள்ள பல்வேறு அரசியல் சாசன அமைப்புகளில் நமது இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டம் அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் உருவாக்கப்பட்ட சட்டமாகும். டாக்டர்.அம்பேத்கர் அவர்கள் பல போராட்டங்களை சந்தித்து அரசியல் அமைப்பு சாசன சட்ட வரைவை ஏற்படுத்தினார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, தீண்டாமை சட்டவிரோதமான செயலாகும். இதனை எவர் ஒருவர் கடைபிடித்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க இந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக பி.சி.ஆர். சட்டம் (Protection of Civil Rights) 1955-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. பி.சி.ஆர். சட்டம் என்பது பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமல்லாது அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டமாகும். 34 ஆண்டு காலம் இந்த சட்டம் அமலில் இருந்தும்கூட இரட்டை குவளை, கொத்தடிமைமுறை தொடர்ந்தது.
இதனை தடுக்கும் விதமாக அப்போதைய ஒன்றிய அரசு இந்த மக்களுக்கென்று சிறப்புச் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என்பதை உணர்ந்து பட்டியலிடப்பட்ட சமுதாயத்தினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர்களுக்காக 1989-ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது.
பட்டியலிடப்பட்ட பிரிவினர் சாதிச்சான்றுகள் பெறுவதில் சிரமம் ஏதுமில்லை. ஆனால் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சாதிச்சான்றுகள் பெறுவதில் பல்வேறு சிரமங்களையும், கால தாமத்தையும் எதிர்கொள்வதாக எடுத்துரைத்தனர். இதனால் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுரைகளை சுற்றறிக்கையாக அனுப்பப்படும். பழங்குடியினர் சிரமமின்றி சாதிச்சான்றிதழ் பெற இந்த ஆணையம் உரிய பரிந்துரையின் மூலம் தமிழக அரசுடன் ஒருங்கிணைந்து இதற்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மனித உரிமை மீறல். இத்தகைய நடவடிக்கைகளை தடுப்பதற்காக தனி சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கழிவுநீர் தொட்டிகள், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் மெத்தனமாக செயல்படும் அலுவலர்கள், தனி நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க இச்சட்டத்தின் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழப்புகள் போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகள் ஏற்படும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு தொகை பெற்றுத்தர இச்சட்டத்தின் கீழ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை இந்த ஆணையம் முன்னின்று செயல்படுத்தும். ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாப்பதும், அவர்களுடைய பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண்பதும் இந்த ஆணையத்தின் நோக்கமாகும்.
இதனை முழுமையாக நிறைவேற்றும் வகையில் இந்த ஆணையம் செயல்படும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் (ஓய்வுபெற்ற நீதிபதி) திரு.பி.ஆர்.சிவக்குமார் அவர்கள் பேசினார்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய உறுப்பினர் செயலர்/தாட்கோ மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாநகர காவல் ஆணையர் தி.செந்தில்குமார், மாநகர காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், ஆணைய துணைத்தலைவர் எம்.புனிதா பாண்டியன், ஆணைய உறுப்பினர்கள் எஸ்.குமர தேவன், பி.இளஞ்செழியன், கே.ரகுபதி, கே.எம்.லீலாவதி தனராஜ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.