
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ள இடம் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நுலகத்தையும் மாண்புமிகு பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்எ.வ.வேலு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-
உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தின் பாரம்பரியம்மிக்க அடையாளமாக விளங்கி வருகிறது. தென்தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி குறிப்பிட்ட சில தினங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில், மதுரை மாவட்டத்தில் பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார்கள்.
அதன்படி ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக பிரம்மாண்ட மைதானம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அலங்காநல்லூரில் இரண்டு அரசுப் புறம்போக்கு நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, அவர்கள் தேர்வு செய்யும் இடத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் தென் மாவட்ட மாணவர்கள், பல்துறை வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் நூலகம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு கட்டிடப்பணிகள் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
கட்டிடப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பணிகள் நிறைவடையும் என பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது மாநகராட்சி மேயர்.இந்திராணி பொன்வசந்த், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், துணை மேயர் நாகராஜன் , பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், தலைமை பொறியாளர் ரகுநாதன், செயற்பொறியாளர் ரமேஷ்குமார் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.