செய்திகள்

மதுரையில் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கர் | அமைச்சர் பி.மூர்த்தி நேரில் ஆய்வு

65 acres in the lower bank village for jallikkattu game in Madurai | Interview with Minister P. Murthy

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளபடி, மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்திட வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், முன்னிலையில் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்கரை கிராமப்பகுதியில் (23.05.2022) நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்கள்.

தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:- தமிழ்நாடு முதலமைச்சர், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில், மதுரை மாவட்டத்தில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.

மதுரையில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தைத்திங்கள் 1-ஆம் நாள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டும், 2-ஆம் நாள் பாலமேடு ஜல்லிக்கட்டும், 3-ஆம் நாள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் முறையே பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டிகள் தொடர்ந்து சிறப்பாக நடத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பணிகள் ஒருங்கிணைக்கப்படும்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளபடி, ஜல்லிக்கட்டுக்காக பிரம்மாண்ட அரங்கு அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்கரை கிராமப்பகுதியில் 65 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தினை பார்வையிட்டுள்ளோம்.

இது தொடர்பாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் எந்த இடத்தினை தெரிவு செய்கிறார்களோ அந்த இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரங்கம் அமைக்கப்பட்டு, அவற்றை தமிழர்கள் மட்டுமன்றி வெளிநாட்டினரும் வந்து பார்வையிடும் வகையில் சுற்றுலாத்தளமாக அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரகுநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவராஜ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: