
மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (01.06.2022) மாவட்ட ஆட்சியர் மரு.எஸ். அனீஷ் சேகர், சுற்றுப்புறத்தூய்மையை வலியுறுத்தும் விதமாகவும், அரிய வகை மரக்கன்றுகளை பராமரித்திடும் நோக்கிலும் மரக்கன்றுகளை நட்டார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்: காற்றுமாசு சுகாதாரத்திற்கு பெரும் ஆபத்து என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, ”மாசில்லா மதுரை” என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் மதுரை மாவட்டத்தில் அரசுத்துறைகளின் கீழ் பணிபுரியும் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாரத்திற்கு ஒரு நாள் (புதன்கிழமை) சுற்றுச்சூழலை மேம்படுத்திடும் விதமாக ஏதேனும் ஒரு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் அரியவகை மற்றும் மூலிகை மரங்களான செங்கருங்காலி, வில்வம், கோழிக்கொண்டை மரம், பிராய், அகர்வுட், பலாசு, புன்னை, சாரக்கொண்டரை, நாகலிங்கம், திருவோடு, ரோஸ்வுட், கருங்காலி, ருத்ராட்சம், கொடம்புளி, ஆப்ரிக்கன் மகோகனி, விலாம், இலுப்பை, செண்பகம், மஞசள் புங்கை, வஞ்சி, வன்னி, ரெட்சேன்டல், ட்ரம்பட் மரம், அர்ஜீனா மற்றும் மலை பூவரசு ஆகிய அரிய வகை மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்திட திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, வல்லபா வித்யாலயா பள்ளியின் தேசிய மாணவர் படை, கடற்படை பிரிவு மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.