
பெரியாறு பிரதான கால்வாய் பாசனத்தாலும், கண்மாய் பாசனத்தாலும் பச்சைவெளியாக இருந்த மதுரை விவசாய நிலங்கள் மட்டுமல்ல கண்மாய்களும் காணாமல் போனதுதான் கவலை அளிக்கும் செய்தி. மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் எதிர்சேவை அன்று மாலை தல்லாகுளம் பெரிய கண்மாய் வடக்குபுறத்தில் உள்ள அம்பலகாரர் மண்டபத்தில் வந்து தங்குவார். இரவு நீர் நிரம்பி இருக்கும் கண்மாய்கரையில் வாணவேடிக்கை நடைபெறும். வானில் சிதறும் மத்தாப்பு வானிலும், கண்மாய் நீரிலும் காட்டும் வர்ணஜாலம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.. இன்று அந்த கண்மாய் இருந்த இடத்தில் மாநகராட்சி அலுவலகமும், வணிகவரி அலுவலகங்களும் செயல்படுகின்றன.
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி வடபுறத்தில் நீண்டு, பரந்து இருந்த நரிமேடு பெரிய கண்மாய் அழிக்கப்பட்டு தொழிலாளர் சேமநலநிதி அலுவலகமும், வானொலி நிலையமும் அவர்களுக்கான குடியிருப்பும் இருக்கின்றது. கோரிப்பாளையம் பெரிய கண்மாய் இருந்த இடத்தில் ஜம்புரோபுரம் மார்க்கெட்டும், சின்னக்கண்மாய் இருந்த இடத்தில் காவலர் குடியிருப்பும் இருக்கிறது. அதன் ஞாபகார்த்தமாக சின்னக் கண்மாய் தெரு மட்டும் இருக்கிறது.
சின்ன சொக்கிகுளத்தில், ஆத்திகுளத்தில் காவலர் ஆயுதப்படை குடியிருப்பு மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்பு உருவாகிவிட்டது. மதிச்சியம் கண்மாய் இருந்த இடத்தில் நீரின்றி அமைந்தது உலக தமிழ் மாநாடு அலுவலகம். தப்பிப் பிழைத்த செல்லூர் கண்மாய், பீபீகுளம் (சுல்தான்நகர்) கண்மாய், வண்டியூர் கண்மாய், திருப்பரங்குன்றம் தெங்கா கண்மாய், மாடக்குளம் கண்மாய், அனுப்பானடி கண்மாய் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு பரப்பில் குறைந்து விட்டன.
இந்த மாதிரி தல்லாகுளம், ஆத்திகுளம், சொக்கிகுளம், பனைக்குளம், மாங்குளம், பேச்சிகுளம் என்ற இடங்கள் எல்லாம் நீர்நிலைகள் பெயரில் வழங்கியதை நினைத்து பெருமூச்சு விடத்தான் முடிகிறது. இவ்வளவு அக்கறையாக எழுதுறீங்களே குளம், கண்மாய், நீராதாரங்களை எல்லாம் மீட்டெடுக்கனும் என்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கலாமே என்று யாரும் கேட்பதற்கு முன்னால் உயர்நீதி மன்ற மதுரை கிளையே உலகனேரி கண்மாயில்தான் கட்டப்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.