
மதுரை விரகனூரில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் வருகின்ற 30.06.2022-அன்று பள்ளிக்கல்வித் துறை சார்பாக (30.06.2022) காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” என்ற தலைப்பில் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தொழில் வழிகாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, அவர்களது தனித்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ‘நான் முதல்வன்’ என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்திட வேண்டும் என்பதே ஆகும். குறிப்பாக மாணவன் மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பதோடு, மாணவர்கள் அடுத்தடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டவும் வழிவகை செய்கிறது.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களுக்கு தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்குவதுடன், உடற்பயிற்சி, நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் மரபு குறித்து விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படுகிறது. இதற்கான பயிற்சிகள் அனைத்தும், தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நேரடிப் பயிற்சி, இணைய வழிப் பயிற்சி, அவரவர் கல்லூரியில் பயிற்சி, மாவட்ட ரீதியாக பயிற்சி எனத் தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் நெறிப்படுத்தும் (mentoring) முறையும் அறிமுகப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்யை உறுதி செய்ய அவரவர் விருப்பத்திற்கேற்ப அயல்நாட்டு மொழிகள் (Foreign Language) கற்பிக்கப்படுவதற்கு இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படுகிறது.
மாணவ, மாணவியர்களின் தகுதி மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப, நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள்/புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் / திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் சேர்க்கையையும் இந்த தொடர் பயிற்சிகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், மத்திய அரசின் வேலைவாய்ப்புகள், பிற மாநிலங்களின் வேலைவாய்ப்புகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு, பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை இப்புதிய திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் naanmudhalvan.tnschools.gov.in-என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திட்டத்தின் கீழ் மதுரை விரகனூரில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் வருகின்ற 30.06.2022 “கல்லூரி கனவு” என்ற தலைப்பில் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொழில் வழிகாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையேற்று தொடங்கி வைக்க உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவியர்கள் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்று பயன்பெற வேண்டும் எனமாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.