
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (18.05.2022) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் சார்பாக மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட கலைத்திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் 2021-2022-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களை ஊக்குவித்திடும் வகையில் “கலைத் திருவிழா”நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மதுரை மாவட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு கலைத்திருவிழா நடத்தப்பட்டது.
இதில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 54 மாணவ, மாணவியர்களுக்கு இன்று (18.05.2022) மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பா.ஜஸ்டின்ஜெயபால் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.