
நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு அரசின் ஆணைக்கிணங்க, ஆண்டுதோறும் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.
அதன்படி, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்தநாளையொட்டி 28.07.2022-அன்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மட்டும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன. பள்ளிப் போட்டி முற்பகல் 09.00 மணி அளவில் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்திலுள்ள கூட்டரங்கில் நடத்தப்பெறவுள்ளது.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் வகையில் முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப் போட்டி நடத்தி முதன்மைக்கல்வி அலுவலர் மூலம் 25 பள்ளி மாணவ, மாணவியர்கள் பரிந்துரை செய்யப்பெற்று மதுரை வளர்ச்சித் துறைக்கு அனுப்பி வைக்கப்பெறுவர்.
போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர்கள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதத்துடன் வரவேண்டும். போட்டிக்கான தலைப்புகள், மாணவர்களுக்கு முன்னதாகத் தெரிவிக்கப்படமாட்டாது.
சென்னை தமிழ் வளர்ச்சி இயக்கத்திலிருந்து முத்திரையிடப்பட்ட உறைகளில் அனுப்பப்படும் தலைப்புகள், போட்டியின்போது நடுவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.
மாவட்ட அளவில் பள்ளிப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.3,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/-மும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.