
மதுரை, ஜெய் நகர் தனியார் பள்ளிக்கூடம் அருகே முதியவர் ஒருவர் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடப்பதாக எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்துக்கு எஸ்.எஸ். காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
தொடர்ந்து விசாரணை செய்ததில் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது எஸ்.எஸ்.காலனி, மாப்பாளைத்தை சேர்ந்த அய்யனார் என்பதும் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதும், பொன்மேனி சுடுகாட்டில் வெட்டியானாக வேலை பார்த்து வரும் நிலையில் அய்யனார் நேற்று நள்ளிரவு சுடுகாட்டில வேலை முடித்து ஜெய் நகர் தனியார் ஸ்கூல் அருகே வந்த போது இளைஞர் ஒருவர் குடிபோதையில் அய்யனாரிடம் ஓசி பீடி கேட்டதாகவும்.
அவர் தர மறுத்ததில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் அருகே இருந்த சுத்தியலால் அடித்ததில் முதியவர் தலை, முகத்தில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
கொலை செய்து இளைஞர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
போலீசார் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி முதியவரை கொலை செய்த இளைஞரை தேடி வந்த நிலையில் பொன்மேனி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் கனேசன் என்பதை உறுதி செய்த போலீசார். அவரது வீட்டில் பதுங்கி இருந்தவரை கைது செய்தனர்.
விசாரனையில் ஏற்கனவே தான் மது போதையில் இருந்ததாகவும், முதியவர் பீடி குடித்துக் கொண்டு இருந்ததால் தனக்கும் பீடி கேட்டதாகவும், அவர் அசிங்கமாக பேசியதால் ஆத்திரத்தில் அருகே வைத்திருந்த சுத்தியலால் அடித்து கொலை செய்ததாகவும் கூறினார்.
குற்றத்தை ஒப்பு கொண்ட கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மதுரையில் ஓசி பீடிக்காக வெட்டியான் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.