
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;
மதுரை மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 420 கிராம ஊராட்சிகளில் குடிநீர், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, செயல்பாடுகளை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் “நம்ம ஊரு சூப்பரு” என்கிற சிறப்பு பிரசார இயக்கம் அனைத்து அரசுத்துறைகளையும்,மக்கள் பிரதிநிதிகளையும், பொதுமக்களையும் இணைத்து ஆகஸ்ட் 20 முதல் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.
முதல்கட்டமாக ஆகஸ்ட் 20 முதல் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை கிராமப்புறங்களில் உள்ள பொது இடங்கள், பள்ளிகள், அங்கன்வடிகள், நீர்நிலைகள், சந்தைப்பகுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்.
மற்றும் அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் ஒட்டு மொத்த தூய்மைப்பணியை உறுதி செய்திட பெருமளவில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. இந்த பிரசார இயக்கத்தில் அரசின் அனைத்தத்துறைகளும் பங்கேற்க உள்ளன. மேலும், பொதுமக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள். தன்னார்வலர்களும். இதர பிற அமைப்புகளும் இந்த பிரசாரத்தில் கலந்த கொள்ளலாம்.
இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 2 -ஆம் தேதி வரை பள்ளிகள் கல்லுரிகளில் உள்ள பேராசியர்கள், ஆசியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு குடிநீர், சுகாதாரம், திட, திரவக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடத்தப்பட உள்ளது.
மூன்றாம் கட்டமாக செப்டம்பர் 3 முதல் 16 ஆம் தேதி வரை ஊரகப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மகளிர் சுகாதார குழு, சுகாதார ஊக்குநர், பிற உறுப்பினர்களைக் கொண்ட தனிநபர் கழிப்பறை உபயோகித்தல், குப்பைகளை மக்கும், மக்காத ‘குப்பைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு, குடிநீர் தரம் பரிசோதித்தல் ஆகிய விழப்புணர்வு பிரசார இயக்கமும் நடைபெற உள்ளது.
நான்காம் கட்டமாக செப்டம்பர் 17 முதல் 23 ஆம் தேதி வரை ஊரகப்பகுதிகளில் நெகிழிகளால் (பிளாஸ்டிக்) ஏற்படும் தீமைகள், நெகிழிகளுக்கு மாற்றாக துணிப்பைகள் பயன்படுத்துவது, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தும் இயக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடைபெற உள்ளது.
ஐந்தாம் கட்டமாக செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1- ஆம் தேதி வரை ஊரகப்பகுதி புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நடுதல், பள்ளிகள், அங்கன்வாடிகளில் தோட்டம் அமைத்தல், வீடுகளில் ஊட்டச்சத்து மிகுந்த காய்கறி தோட்டம் அமைத்தல் போன்ற விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட உள்ளது.
அக்டோபர் 2 – ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு, இது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். எனவே, இந்த பிரசார இயக்கங்களில் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பிற அமைப்புகள் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.