
கூடலழகர் பெருமாள் கோவில்
மதுரையின் மையப் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவில், பெரியார் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள கூடலழகர் பெருமாள் கோவில் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். வேறு எந்த பெருமாள் கோவிலிலும் இல்லாத நவக்கிரக சன்னதி இங்கு அமைந்திருப்பது இக்கோவிலில் தனிச்சிறப்பாகும். பிரகாரச் சுவர்களில் வரையப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களின் ஓவியம் கண்களுக்கு விருந்தாகும்.
திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் கோவில்
மதுரையிலிருந்து 20 கி. மீட்டர் தொலைவில் வடக்கு கோடியில் அழகு கொழுவிருக்கும் அழகர் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் அழகர் கோவில் மனநிறைவளிக்கும் வைணவத் தலமாகும். அனுமனின் வடிவமான குரங்குகள் நிறைந்த, பசுமையான சூழலில் பெருமாள் அருள்பாலிக்கும் இக் கோவிலைவிட்டுத் திரும்ப மனமே வராது. நுழைவாயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி, மலைமீது நூபுரகங்கைத் தீர்த்தத்தில் உள்ள ராக்காயி அம்மன், முருகனின் படைவீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை கோவில்கள் அமைந்திருப்பதும் அழகர் மலையின் சிறப்பாகும்.
சிலப்பதிகாரம், பரிபாடல்களில் அழகர் கோவிலின் சிறப்பு பற்றி பாடப்பட்டுள்ளதிலிருந்து இதன் பழமையையும, அழகையும் அறிந்து கொள்ளலாம். இக்கோவிலில் வழங்கப்படும் உளுந்து தோசைக்கு என்னைப்போல் அடிமையானவர்கள் ஏராளம்.
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்
மதுரையில் உயர்நீதிமன்ற கிளை, ஒத்தக் கடையை அடுத்துள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் பாடல்பெற்ற திவ்ய தேசங்களில் ஒன்றாகும். தாமரை மலர்கள் நிறைந்த தெப்பக்குளம், தென்னை மரங்கள் சூழ்ந்த வெளிப்பிரகாரம் என அழகு கொஞ்சும் இயற்கைச் சூழலில் காளமேகப் பெருமாள் அருளாசி வழங்குகிறார். மோகன ஷேத்திரம் என சிறப்புப் பெயரை பெற்றுள்ளதிருந்து இப்பெருமாள் வடிவழகை அறிந்து கொள்ளலாம். இங்குள்ள மடப்பள்ளியில் கிடைக்கும் தேன்குழல் (முறுக்கு) போன்று வேறு எங்கும் கிடைக்காது.
ஒத்தக்கடை யோகநரசிம்மர் ஆலயம், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயம், சோழவந்தான் குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் ஆலயம் ஆகியவையும் மதுரையின் சிறப்புமிகு வைணவத்தலங்களாகும். இன்னும் மதுரையில் இதுபோன்று சிறப்புகள் பல உண்டு. அதில் இதுவும் ஒன்று.