கட்டுரைகள்மதுரை

மதுரையின் தோற்றம் ஓர் பார்வை

Madurai Story 02

மதுரையின் தோற்றம் இன்றைய உலகின் மிக பழமையான நகரங்களில் ஒன்று மதுரை என்று வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்லி வந்தாலும் அதற்கு ஆதாரம் இல்லை என்பதுதான் உண்மை. நமக்கு ஆதாரமாக இருந்தவைகள் எல்லாம் இலக்கியங்கள் மட்டுமே. மதுரை அத்தனை பழமையான நகரம் ஒன்றுமில்லை என்று வாதிடுபவர்களுக்கு இது வசதியாகப் போய்விட்டது.

கி.மு.3ம் நூற்றாண்டிலேயே தமிழ் சங்கம் மதுரையில் சிறப்பாக செயல்பட்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகின்ற அதேவேளையில் மதுரையில் 9ம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டுகள் ஒன்றுகூட கிடைக்கவில்லை. அதனால் இது புதிதாக தோன்றிய மதுரை என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தார்கள். அப்படியயன்றால் பழைய மதுரை எங்கிருக்கிறது என்ற தேடலுக்கு இலக்கியத்திலேயே விடை கிடைக்கிறது.

இலக்கியங்களில் மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு தென் கிழக்கே இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது இருக்கும் மதுரையோ வட கிழக்கில் இருக்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் வைகை ஆற்றின் கரையில் இருக்கும் மணலூர் பகுதியில்தான் பழைய மதுரை இருந்திருக்க வேண்டும். அது 9000 ஆண்டுகள் பழமை மிக்கதாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்தார்கள். அந்த பழைய மதுரைக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்றால் அதுவும் வெகுநாட்களாக கண்ணில் சிக்கவில்லை.

இந்த நிலையில்தான் வைகை நதி நாகரிகம் என்ற பெயரில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி, வரலாற்று ஆய்வாளர்களுக்கு புதுத்தெம்பைக் கொடுத்தது. இலக்கியங்களை மட்டுமே ஆதாரமாக சொல்லிக் கொண்டிருந்த வர்களுக்கு மண்ணுக்கடியிலிருந்து மிகவும் முன்னேறிய ஒரு நகரம் வெளிச்சத்திற்கு வந்தது, உற்சாகத்தை அள்ளித் தந்தது. இது பழைய மதுரை நகரின் ஒரு பகுதிதான் என்று அடித்துச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இலக்கியங்கள் சொன்ன மதுரைக்கும் கீழடி அகழ்வாராய்ச்சிக்கும் மிக நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. சரி, அங்கிருந்த மதுரை கிட்டத்தட்ட 14 கி.மீ. கடந்து இப்போது இருக்கும் இடத்தில் புதிதாக உருவாக என்ன காரணம்? இந்த கேள்விக்கு பதில் நாம் புராணங்களுக்குள் தான் தேட வேண்டும். புராணங்கள் இல்லாமல் மதுரை வரலாற்றை சொல்லவே முடியாது.

முன்னொரு காலத்தில் இன்றைய மதுரை இருக்கும் இடம் அடர்ந்த கடம்ப வனமாக இருந்திருக்கிறது. இப்படி வனமாக இருந்ததால் மதுரைக்கு ‘கடம்பவனம்’ என்றொரு பெயர் கூட இருக்கிறது. இந்த கடம்பவனத்துக்குள் ஒரு நாள் வியாபாரத்தை முடித்துக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தான் தனஞ்சயன் என்றொரு வணிகன். அப்போது அவன் கண்ட காட்சி அவனை பிரமிப்பில் ஆழ்த்தியது. ஒரு கடம்ப மரத்தடியில் சுயம்புவாக ஒரு சிவலிங்கம் தோன்றியிருந்தது.

அந்த லிங்கத்தை வானத்து தேவர்கள் ஒன்றுகூடி வணங்கிக் கொண்டிருந்தார்கள். அதேவேçeயில் மன்னன் குலசேகர பாண்டியன் கனவிலும் இறைவன் தோன்றி, ‘வணிகன் ஒருவன் உன்னிடம் ஒரு சேதி சொல்வான். அவன் சொன்ன இடத்தில் எனக்கொரு கோயில் கட்டி ஒரு நகரத்தை உருவாக்கு..!’ என்று கட்டளையிட்டு மறைந்தான். மன்னன் மறுநாள் வணிகனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தான். அங்கே வந்து சேர்ந்தான் வணிகன். கடம்பவனத்துக்குள் தான் இரவு கண்ட காட்சியை சொன்ன போது மன்னன் புல்லரித்துப்போனான். உடனே தனது பரிவாரங்களோடு கடம்பவனம் புறப்பட்டான் மன்னன். காட்டை அழித்து, அங்கொரு கோயிலைக் கட்டினான். கோயிலைச் சுற்றி நகரை உருவாக்கினான்.

அப்படி உருவான நகரம்தான் மதுரை மாநகரம். மதுரை நகரை உருவாக்கிய குலசேகர பாண்டியன் மற்றும் தனஞ்ச்யன் சிலைகள் மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகருக்கு பெயர் சூட்டும் நாளன்று சிவபெருமான் எழுந்தருளினார். அப்போது அவரது சடை முடியிலிருந்து மதுரம் என்ற தேன்துளி நகரின் மீது விழுந்ததாகவும், அதனால் மதுரை என்று பெயர் வந்ததாகவும் ஒரு புராணக்கதை உண்டு.

ஆனால், மதுரை என்ற பெயருக்கு ஆய்வாளர்கள் வேறொரு காரணம் சொல்கிறார்கள்.
ஒரு காலத்தில் மதுரையைச் சுற்றிலும் மருத மரங்கள் நிறைந்திருந்ததாகவும் அதனால் மருதை என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். இன்றும் கிராமப்புற மக்கள் மதுரையை மருதை என்றே அழைக்கிறார்கள். மதுரைக்கு வேறு பல பெயர்கள் இருக்கின்றன.

அவைகள்: கூடல்மாநகர், ஆலவாய், நான்மாடக்கூடல். ஒவ்வொரு பெயருக்கும் காரணம் இருக்கிறது. மதுரையை அழிக்க வருணன் ஏழு மேகங்களை அனுப்பினான் என்றும், அதனை அறிந்த பாண்டிய மன்னன் இறைவனிடம் முறையிட இறைவனோ மதுரையைக் காக்க நான்கு மேகங்கçe அனுப்பிவைக்க அந்த நான்கு மேகங்களும் நான்கு திசைகளிலும் நான்கு மாடங்களாய் நின்று காக்க நான்மாடக்கூடல் என்று பெயர் வந்ததாக திருவிளையாடற்புராணம் கூறுகிறது.

மதுரையை விரிவுபடுத்த எண்ணிய பாண்டிய மன்னன் இறைவனிடம் எல்லையை வகுத்துத்தரச் சொல் லிக் கேட்டான். இறைவன் தன் கையிலிருந்த பாம்பிடம் எல்லையை வரையறுத்து தருமாறு ஆணையிட்டார். பாம்பு தன் வாலை நீட்டி உடலை வலப்பக்கமாக வளைத்து அந்த வாலை தன் வாயில் கவ்வி மதுரையின் எல்லையைக் காட்டியது. அன்று முதல் ஆலவாய் என்று பெயர் மதுரைக்கு வந்தது. மதுரையின் உருவாக்கம் இப்படித்தான் தொடங்கியது.

எழுத்து – எஸ்.பி. செந்தில்குமார்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: