
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (18.05.2022) மதுவிளக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுபானம் மற்றும் குடிப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார்.
தமிழ்நாடு அரசு மதுவிளக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பாக, மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், மதுரை மாவட்டத்தில்மதுபானம் மற்றும் மது அருந்தும் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவியர்கள் 3 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை இயங்கக்கூடிய அளவில் குறும்படம் தயார் செய்து சமர்ப்பித்திடவும், சிறந்த குறும்படத்திற்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில். மதுரை மாவட்டத்தில் 21 நபர்கள் குறும்படம் தயார் செய்து சமர்ப்பித்துள்ளனர். சிறந்த குறும்படங்களை தேர்வு செய்வதற்கு அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் பரிந்துரையின்பேரில், வரப்பெற்ற குறும்படங்களில் ஸ்ரீதரன் முருகன் தயாரித்த ஒரு ஆட்டுக்குட்டியின் ஆவணம் என்ற குறும்படத்திற்கு முதல் பரிசு தொகையாக ரூ.1,000,000/-மும், ராமசந்திரன் தயார் செய்த மயாணம் என்ற குறும்படத்திற்கு இரண்டாம் பரிசு தொகையாக ரூ.75,000/-மும்.
சந்தனமாரி சங்கரப்பாண்டி தயார் செய்த வாழ்க்கை ஒரு வரம் என்ற குறும்படத்திற்கும், செந்தில்குமார் ராமையா தயார் செய்த தண்ணீர் கண்ணீர் என்ற குறும்படத்திற்கும் மற்றும் பிரியதர்ஷன் தயார் செய்த தூ…. என்ற குறும்படத்திற்கும் மூன்றாம் பரிசு தொகையாக தலா ரூ.16,500/-மும் சேர்த்து மொத்தம் 5 நபர்களுக்குரூ.2,24,500/-க்கான பரிசு தொகையினை வழங்கப்பட உள்ளன.
மேலும், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மதுபானம் மற்றும் குடிப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வக்பு வாரிய கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், உதவி ஆணையர் (கலால்) வ.முருகானந்தம் உட்பட அரசு அலுவலர்கள், வக்பு வாரியக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.