
மதுரை காளவாசல் பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலத்தில், பழங்கானத்தத்தில் இருந்து கோச்சடை நோக்கி தாயும், மகளும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இதன் பின்னால் அதி மிஞ்சிய மதுபோதையில் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாய் மகள் மீது பயங்கரமாக மோதினார்.
நிலைகுலைந்த தாயும், மகளும் கீழே விழுந்தனர். இதில் தாய்க்கும், மகளுக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் மது போதையில் இருந்த நபரை பிடித்து போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து துணை ஆய்வாளர் மற்றும் எஸ்.எஸ்.காலனி காவலர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். உடனடியாக போக்குவரத்து துணை ஆய்வாளர் தாஜூஸ் பிரித் அனலைசர் மூலமாக எவ்வளவு அளவு மது குடித்துள்ளார் என கணக்கிட்டு பார்க்க போது, சுமார் 170 சதவீதம் மேல் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்த போக்குவரத்து காவலர்கள் அவருக்கு ரூபாய் 10,000 அபராதமும் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளருக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்த போக்குவரத்து துணை ஆய்வாளருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டினை தெரிவித்தனர். மேலும் காயம் அடைந்த தாய், மகளும் அருகே உள்ள தனியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். நாளுக்கு நாள் மது போதையில் வாகனங்களை இயக்குவது தற்பொழுது தொடர்கதையாக ஆகி வருகிறது.
இதனால் இவர்கள் விபத்தில் சிக்குவது மட்டுமல்லாது, முன்னால் செல்பவர்களையும் படுகாயம் அடையச் செய்து உயிரிழப்புகளும் ஏற்படுத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே காவல்துறை மதுபோதையில் வருபவர்களை தடுக்க ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு செய்ய வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.