கலெக்டர்செய்திகள்

பேரிடர் மேலாண்மை தொடர்பான முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை குறித்து மதுரை கலெக்டர் ஆய்வு

Madurai Collector Survey on Precautionary Model Rehearsal in Disaster Management

மதுரை கோசாகுளம் பகுதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள தற்காலிக பேரிடர் நிவாரண மையமான சி.இ.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் (01.09.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், பேரிடர் மேலாண்மை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-

தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களின் அறிவுறுத்தலின் படி மதுரை மாவட்டத்தில் இன்றைய தினம் ஐந்து இடங்களில் பேரிடர் / வெள்ளப்பெருக்கு தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை நடத்தப்பட்டது.

குறிப்பாக வாடிப்பட்டி வட்டத்தில் மேலக்கால் வைகை ஆற்றங்கரை, மதுரை மேற்கு வட்டத்தில் துவரிமான் வைகை ஆற்றங்கரை, மதுரை வடக்கு வட்டத்தில் மீனாட்சி கல்லூரி அருகே உள்ள வைகை ஆற்றங்கரை, மதுரை தெற்கு வட்டத்தில் தெப்பக்குளம் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டத்தில் தென்கால் கண்மாய் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

இப்பணிகள் 5 துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் தலைமையில் ஒவ்வொரு இடத்திலும் 50 க்கும் மேற்பட்ட அலுவலர்கள், 200 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்கும் வகையில் இந்த விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க ஏதுவாக 190 தற்காலிக நிவாரண மையங்கள் தெரிவு செய்யப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாதிரி ஒத்திகையின் ஒரு பகுதியாக இம்மையங்களில் அவசரகால சூழ்நிலையில் பொதுமக்களுக்கு அடிப்படை அத்தியாவசிய தேவைகளான உணவுப் பொருட்கள், பால் பவுடர், மருந்து மாத்திரைகள், சுத்தமான குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் தயார்நிலையில் வைத்தல் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

குறிப்பாக முன்னெச்சரிக்கை தகவல் குழு (EARLY WARNING TEAM), மீட்புக் குழு (RELIEF AND RESCUE TEAM), மறுசீரமைப்புக் குழு (RESTORATION AND SHELTER TEAM) என அந்தந்த குழுக்களுக்கு உரிய அறிவுரை வழங்ப்பட்டு பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பருவமழை தொடங்கவுள்ள சூழ்நிலையில் மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணையிலிருந்து தற்போது விநாடிக்கு 7000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் 50 சதவீதம் முழுக் கொள்ளளவையும், 25 சதவீதம் 75 சதவீதம் கொள்ளளவையும் எட்டியுள்ளன. மீதமுள்ள நீர்நிலைகளில் 50 சதவீதத்திற்கும் குறைவாக நீர் நிரம்பியுள்ளன. நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணித்திடவும், நீர் நிலைகளில் உடைப்பு ஏற்படாத வகையில் கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை மேற்கொள்ள பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வைகை கரையோரங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. வைகை கரையோரம் எளிதில் நீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 27 இடங்கள் கண்டறியப்பட்டு சூழலுக்கேற்ப பொதுமக்களை மீட்டு அருகே உள்ள நிவாரண மையங்களில் தங்கவைப்பதற்கு அலுவலர் குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வைகை ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக வைகை ஆற்றில் இறங்குவதை பொதுமக்கள் தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை கண்காணித்திட அலுவலர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு தாமாக முன்வந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

அதேபோல பருவமழை காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல் நோய் பரவலை தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் சிரமமின்றி தெரிந்துகொள்வதற்கும், புகார்கள் தெரிவிப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் தொடர்ந்து செயல்படும் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மீனாட்சி கல்லூரி அருகே உள்ள வைகை ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்பட்ட பேரிடர் முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டார். மேலும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்தார்.

இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ரா.சக்திவேல் அவர்கள் உடனிருந்தார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: