தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நடிகர் திலகம், செவாலியே சிவாஜி அவர்களை பற்றி நான் சொல்லி தெரியப்போவது ஏதுமில்லை. உலகம் அறிந்த மகா நடிகர். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நடிப்பு பொக்கிசம். உலக சினிமா நட்சத்திரங்கள் இன்றளவும் வியக்கும் ஒரே நடிகர் என்றால் அது சிவாஜி கணேசன் அவர்கள்தான்.
இவரைப்போல் வசனம் பேசுவதற்கு இன்றளவும் மட்டுமல்ல இனி என்றளவும் பிறப்பது சாத்தியமில்லாத ஒன்றுதான். தனது நடிப்புத் திறமையால் அனைவரையும் மட்டுமல்ல அவரது அன்னையையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இதை சிவாஜி மகன் பிரபு அவர்கள் மேடையில் கூறியதை உங்களுக்கும் கூறுகின்றேன்.
சிவாஜி நடிப்பில் எத்தனையோ வெற்றிப் படங்கள் உள்ளன. அதில் திருவருட்செல்வர் படம் மிக முக்கியமானது. இந்த படத்தில் நடிக்கும் போது சிவாஜி கணேசனுக்கு 39 வயது. ஆனால் அதில் 80 வயது முதுமையை மிக தத்ரூபமாக நடித்து காட்டியவர். அந்தகாட்சியில் கண் பார்வை மங்கி, குரல் நடுங்க பேசி தவண்டு கொண்டே வந்து நடித்த காட்சியை மறக்க முடியுமா ?
‘‘திருவருட் செல்வர் படத்தில், சிவாஜிக்கு மிக வயதான முதியவர் போன்ற வேடம் போடப்பட்டுள்ளது. முதல் நாள் படப்பிடிப்பு முடிந்தது. ஆனால், சிவாஜிக்கு மேக்கப்பை கலைக்க மனம் விரும்பவில்லை. மேக்கப்பை கலைக்காமல் தனது காரில் வேகமாக ஏறி, அப்படியே வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டுக்கு வந்ததும் வாசலில் நின்றபடி குரலை மாற்றி, ‘‘அம்மா தாயே’’ என்று குரல் கொடுக்கிறார். இந்த குரலைக் கேட்டதும், சிவாஜியின் தாயார் ராஜாமணி அம்மாள் வெளியே வருகிறார்.
வந்தவரிடம், ‘‘நான் ஒரு சிவபக்தன். கைலாய மலைக்கு போய்க்கொண்டிருக்கிறேன் அம்மா. வழியில் கிடைப்பதை சாப்பிடுவேன். எனக்கு இப்போது கடுமையாக பசிக்கிறது. ஒரு வாய் சோறு கிடைக்குமா?’’ என்று கேட்கிறார். பக்தி பரவசத்தில் ராஜாமணி அம்மாள், வந்திருப்பவர் தன் மகன் என்று அறியாமல், வீட்டுக்குள் அழைத்துச் சென்று உணவு கொடுத்து வணங்குகிறார்.
சாமியார் சாப்பிடும் விதத்தை பார்த்து, `நம்ம கணேசன் சாப்பிடுவதைப்போல் இருக்கிறதே’ என்று ராஜா மணி அம்மாள் கூர்ந்து கவனிக்கிறார். எத்தனையோ முக பாவங்களை காட்டுபவர், அம்மாவின் முகமாறுதலை பார்த்து சத்தம் போட்டு சிரிக்கிறார்.
அந்த சிரிப்பை பார்த்து சாப்பிடுபவர் தன் மகன்தான் என்பதை உணர்ந்து பிரமிக்கிறார், ராஜாமணி அம்மாள். நடிப்பு திறமையால் பெற்ற தாயின் கண் களையே ஏமாற்றியவர், நடிகர் திலகம்’’ என்றார், பிரபு. தனது நடிப்பை தாண்டி தனது மேக்கப் மீது இருந்த சந்தேகத்தை தன் தயாரிடம் காண்பித்து அதை நிவர்த்தி செய்து கொண்ட நடிகர் திலகத்தின் நடிப்பு நுட்பத்தில் இது ஒரு பகுதி மட்டுமே. இன்னும் பல உண்டு. வேறு ஒரு நடிகர் திலகத்தின் தகவலுடன் உங்களை சந்திக்கும் வரை விடை பெறுவது உங்கள் சினிமா ரசிகன். நன்றி வணக்கம்.