
மதுரை நகரைச் சுற்றிலும் வானுற ஓங்கிய மதில் அமைக்கப்பட்டிருந்த செய்தி சங்க இலக்கியங்களால் அறியப்படுகிறது. அதனைச் சூழ்ந்து ஆழமான நீர் நிறைந்த அகழிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவ்வகழியிலே குவளையும் ஆம்பலும், கமலும் நிரம்ப காணப்பட்டன.
யானைக் கூட்டங்கள் போவதற்கு ஏற்ற சுரங்கவழியும் அமைக்கப்பட்டிருந்தது. என்பதைக் கீழ்க்கண்ட பாடல் வரிகளால் உணரலாம்.
……………………அகழியிற்
பெருங்கை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி
சங்க காலம் போன்றே இடைக்கால மதுரையிலும் அகழிகள் இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மதுரைநகர் விரிவாக்கப்பட்ட போது மதில் இடிக்கப்பட்டு அகழி அகற்றப்பட்டது. மதுரையைச் சுற்றிலும் அகழி இருந்த வரலாற்றுண்மையை பாண்டியன் அகழ் தெரு எனும் தெருப்பெயர் உறுதி செய்கிறது அன்றோ அகழி என்பதே அகழ் எனக் குறுகிவிட்டது என்க.
பாண்டியன் அகழ் தெரு என்பதற்கு கழுதை அக்ரஹாரத்தெரு என்ற பெயரும் உண்டு என்று சோலமலை தமது நூலில் குறிப்பிடுகிறார். கழுதை என்பது கைதை என்பதன் திரிபாகும். கைதை என்பதற்குத் தாழை என்றொரு பொருள் உண்டு.அகழி இருந்திருந்தால் தாழை இருந்திருக்க வேண்டுமன்றோ? இப்பெயர் பொருத்தம் அகழி இருந்த உண்மைக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அமைகிறது.
பாண்டிய மன்னர்களுக்கு கைதவன் என்றொரு குலப் பெயர் உண்டு. கைதவன் என்பதே கைதை என்றாகி பின்னர் கழுதை என மருவியிருக்கவும் வாய்ப்புண்டு.எப்படியாயினும் இத்தெருப்பெயர் மதுரையில் அகழி இருந்ததை உறுதியாக அறிவிக்கிறது என்பதில் ஐயமில்லை.
தெற்கு பாண்டியன் அகழ் தெரு, மேலப்பாண்டியன் அகழ் தெரு எனும் வேறு தெருக்களும் இதே உண்மையை உறுதி செய்யும் வண்ணம் பெயரிடப்பட்டுள்ளன.