பருவமழையால் நிரம்பி வழியும் மதுரை சாத்தியார் அணை; 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணை கடந்த சில ஆண்டுகளாக பரவமழை பெய்யாத காரணத்தால் வறண்டு காணப்பட்டது. இதனால் இப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் வறண்டு பாலைவனம் போல காட்டியளித்தது. விவசாயிகள் குழு அமைத்து வைகை அணையிலிருந்து சாத்தியார் அணைக்கு குழாய் மூலம் நீர் கொண்டுவந்து நிரப்ப வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக இப்பகுதியில் ஓரளவு மழை பெய்தது. இருப்பினும் இந்த அணைக்கு நீர் பிடிப்பு பகுதியில் இருந்து தண்ணீர் வராமல் அணையில் உள்ள பள்ளத்தில் மட்டும் மழை நீர் நிரம்பி குளம் போல காட்சியளித்தது.
பருவ மழை பெய்தும் அணைக்கு நீர்பிடிப்பு பகுதியிலிருந்து மழை நீர் வரவில்லை என விவசாயிகள் கவலை அடைந்தனர். பின்னர் இப்பகுதி பாசன விவசாயிகள் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சென்று பார்த்தபோது மலையிலிருந்து வரும் நீரை ஒரு சில கிராமத்தினர் தங்கள் பகுதிக்கு அடைத்து வைத்து ஆக்கிரமித்து நீரை திருப்பி விட்டது தெரியவந்தது. தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சாத்தியார் அணைக்கு நீர்பிடிப்பு பகுதியில் இருந்து நேரடியாக தண்ணீர் வர நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனால் அணை கொஞ்சம் கொஞ்சமாக நிரம்ப ஆரம்பித்தது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்த பருவமழை காரணமாக தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியிலிருந்து விவசாயிகள் காவலிலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றியதன் காரணமாக மழைநீர் வந்து தற்போது அணை முழு கொள்ளளவை எட்டி முழுவதுமாக நிரம்பி மறுகால் செல்கிறது.
இதனால் இப்பகுதியில் சுமார் 2,000 ஏக்கர் நஞ்சை நிலங்களும் ஆயிரம் ஏக்கர் புஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து அணைக்கு நீர் வந்து கொண்டுள்ளது. தொடர்ந்து 11 கிராம பாசன விவசாயிகள், பொதுமக்கள், அதிகாரிகள் என பலரும் அணையை மகிழ்ச்சியுடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். நேற்று முதல் அணை முழுதும் நிரம்பி மறுகால் செல்வதால் இப்பகுதி விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். விவசாயிகளின் இந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியால் தான் இந்த அணை நிரம்பியது என பலரும் பாராட்டி வருகின்றனர்.