
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (29.08.2022) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை வெளியிட்டார்.
இந்த பட்டியலின்படி, மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 1,163 இடங்களில் மொத்தம் 2,718 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் / மாநகராட்சி துணை ஆணையாளர் அலுவலகம்/
மற்றும் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவரின் https://madurai.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.
வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் தொடர்பான கருத்துகள், வாக்குச்சாவடிகள் தொடர்பான கோரிக்கைகள் / ஆட்சேபணைகள் ஆகியன பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து வரவேற்கப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள், வாக்குச்சாவடிகள் தொடர்பான தங்களது கருத்துகள் / கோரிக்கைகள் / ஆட்சேபணைகள் ஆகியவற்றை மேற்குறிப்பிட்ட அலுவலகங்களில் 14.09.2022 வரை அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து வரப்பெறும் கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய முறையில் பரிசீலனை செய்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகி பிரமிளா, பிரிதோஷ் பாத்திமா, நடராஜன், அபிநயா அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.