கால்நடைவிவசாயம்

லவ்பேட்ஸ் வளர்ப்பும்… வருமானமும்….

Story Highlights

  • கூண்டுகளில் வலைகள் அமைக்கும் பொழுது 1 செ.மீ ஓ 1 செ.மீ இடைவெளி கொண்ட சதுர வலைகளாக அமைக்க வேண்டும்.
  • போதுமான அளவு பானைகள் இல்லையென்றால் இதர பெண் பறவைகள் முட்டையிடுவதற்கு தமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வதுடன் ஏற்கனவே பானைகளில் இருக்கும் முட்டைகள் மற்றும் இளம் குஞ்சுகளைக் கீழே தள்ளிவிட்டு அவை முட்டையிடும்.
  • முட்டையிட ஆரம்பித்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என முட்டையிட்டு 4 முதல் 6 முட்டைகளை இடும்.
  • முட்டையிட்ட பின் பானையிலேயே உட்கார்ந்து மீதி முட்டைகளை இட்டு அடை காக்கும். அடைக் காலம் 22 முதல் 25 நாட்கள் ஆகும்.

தற்பொழுது நிலவி வரும் இயந்திரமான வாழ்க்கை முறையில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை மன இறுக்கத்தைக் குறைக்கவும், தோழமைக்காகவும், அன்பு காட்டி நேசத்துடன் பழகவும், தங்களின் மகிழ்ச்சிக்காகவும், வீட்டின் அழகை மேம்படுத்தவும் நேசப்பறவைகளை வளர்த்து வருவது அதிகரித்து வருகிறது. ஏனெனில் நேசப்பறவைகளை வளர்ப்பதற்கு சிறிய இடம் போதுமானது. பராமரிப்பும் எளிது.

நேசப் பறவைகளை பராமரிப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு அதிக பட்சம் அரை மணி நேரம் செலவிட்டாலே போதுமானது. நேசப்பறவைகளை விற்பதும் எளிது. இவ்வாறு விற்பனை வாய்ப்பு அதிகமாக இருக்கும் நேசப்பறவைகள் வளர்ப்புத் தொழிலை மகளிர் வீட்டிலிருந்த படியே அல்லது மற்ற தொழில்களை செய்து கொண்டே மாதத்திற்கு கணிசமான வருமானம் பெறுவதற்கான ஒரு சுயதொழிலாக மேற்கொண்டு நல்ல இலாபம் பெற முடியும்.

நேசப்பறவைகளுக்கான கூண்டமைப்பு:

நேசப்பறவைகளுக்கு மரச்சட்டங்கள் மற்றும் வலைகள் கொண்ட செவ்வக வடிவ கூண்டே சிறந்தது. ஏனெனில் செவ்வக வடிவ கூண்டுகள் அதிக அளவு பறக்கும் இட வசதியுடன் இருக்கும். பொதுவாக 5 அடி நீளம் 3 அடி அகலம் 3 அடி உயரம் உள்ள செவ்வக கூண்டுகளில் நேசப் பறவைகளை வளர்க்கலாம்.

கூண்டுகளில் வலைகள் அமைக்கும் பொழுது 1 செ.மீ ஓ 1 செ.மீ இடைவெளி கொண்ட சதுர வலைகளாக அமைக்க வேண்டும். நேசப்பறவைகள் நன்கு ஆரோக்கியமாக வளர்வதற்கு நல்ல காற்றோட்டமான மற்றும்; இதமான சூரிய வெளிச்சம் படும் இடத்தில் கூண்டுகள் அமைக்கப்பட வேண்டும். நேரிடையாக சூரிய வெளிச்சம் படும் இடத்தில் கூண்டுகளை வைக்கக்கூடாது. நேசப்பறவைகள் வெளியே தப்பிச் செல்லாதவாறு கூண்டுகளின் கதவில் தாழ்ப்பாளை அமைக்க வேண்டும்.

முட்டையிடுவதற்கான பானைகள்:

பெண் நேசப் பறவைகள் இயற்கையாகவே முட்டையிட்டு அடைகாக்கும் திறன் பெற்றவை. பெண் பறவைகள் முட்டையிட்டு அடைகாக்க வசதியாக பானைகளை போதிய எண்ணிக்கையில் கட்டித் தொங்க விட வேண்டும். பானைகளின் வாயை மூடி போட்டு மூடி வைக்க வேண்டும். ஏனெனில் பெண் நேசப் பறவைகள் சத்தமில்லாத, ஓரளவு இருண்ட சூழ்நிலையில் தான் முட்டையிடுவதற்கும் அடைகாப்பதற்கும் விருப்பப்படும்.

போதுமான அளவு பானைகள் இல்லையென்றால் இதர பெண் பறவைகள் முட்டையிடுவதற்கு தமக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வதுடன் ஏற்கனவே பானைகளில் இருக்கும் முட்டைகள் மற்றும் இளம் குஞ்சுகளைக் கீழே தள்ளிவிட்டு அவை முட்டையிடும். எனவே நேசப் பறவைகளுக்குள் சண்டையை தவிர்க்கவும், முட்டைகள் மற்றும் இளங்குஞ்சுகள் அதிக அளவில் விரையமாவதைத் தவிர்க்கவும் போதிய அளவில் பானைகளைக் கட்டித் தொங்க விட வேண்டும். ஒரு முறை வைக்கும் பானையை இரண்டு இனப்பெருக்கக் காலத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

நேசப் பறவைகள் ஓய்வெடுக்கும் குச்சிகள்:

நேசப் பறவைகள் இளைப்பாற மரச்சட்டங்களால் ஆன பரண்களை அமைக்க வேண்டும். புறவைகள் ஓய்வெடுக்கும் குச்சிகள் அலுமினியம், இரும்பு, பிளாஸ்டிக் போன்றவற்றாலும் அமைக்கலாம். ஒரே கூண்டில் வெவ்வேறு அளவுள்ள குச்சிகளை வைப்பதன் மூலம் நேசப் பறவைகளில் கால்வலி பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தீவனப் பராமரிப்பு

நேசப்பறவைகளுக்கு தினை, உடைத்த கொட்டைகள் மற்றும் பழங்களை உணவாகக் கொடுக்கலாம். இவற்றுடன் கொத்தமல்லி, இளம்புற்கள், கீரைகள் போன்ற பசுந்தீவனங்கைள்; கொடுத்தல் வேண்டும். தீவனம் மற்றும் குடிநீர் கொடுப்பதற்கு அலுமினியம், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தலாம். வாரத்திற்கு இரு முறை பி-காம்ப்ளக்ஸ் மருந்தை குடிநீரில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மி.லி என்ற அளவில் கலந்து கொடுத்தால் நேசப் பறவைகள் ஆரோக்களியமாக இருக்கும்.

முட்டையிடும் நேசப்பறவைகளுக்கு சுண்ணாம்புச் சத்து மிகவும் அவசியம். அதற்கு கடல்நுரை அல்லது கிளிஞ்சல் தூளை நேசப் பறவைகள் சாப்பிடுவதற்கு வசதியாக ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வேப்ப இலைகளை பசுந்தீவனத்துடன் கொடுக்க வேண்டும். இது நேசப்பறவைகளின் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கும் தன்மை உடையது.

இனப்பெருக்கப்பராமரிப்பு:

பொதுவாக நேசப்பறவைகள் 10 மாத வயதிற்குப் பிறகு இனப்பெருக்கத்திற்குத் தயாராகி விடும். பெண் நேசப் பறவையானது முட்டையிட ஆரம்பித்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என முட்டையிட்டு 4 முதல் 6 முட்டைகளை இடும். பெண் நேசப்பறவை இரண்டாவது முட்டையிட்ட பின் பானையிலேயே உட்கார்ந்து மீதி முட்டைகளை இட்டு அடை காக்கும். அடைக் காலம் 22 முதல் 25 நாட்கள் ஆகும்.

பெண் பறவைகள் அடை காக்கும் காலத்தில் ஆண் நேசப் பறவைகள் உணவு கொடுத்து பெண் நேசப் பறவைகளை சிறப்பாக கவனித்துக் கொள்ளும். குஞ்சுகள் பொரித்த பின் 35 லிருந்து 50 நாட்கள் வரை பானையிலேயே வைத்திருந்து ஆண் மற்றும் பெண் நேசப்பறவைகள் குஞ்சுகளுக்கு உணவளித்து பராமரிக்கும். பிறகு குஞ்சுகள் பானையிலிருந்து வெளிவந்து தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும்.

பொதுவான பராமரிப்பு முறைகள்:

போதுமான அளவு குடிநீர் மற்றும் தீவனம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நேசப்பறவைகளின் கூண்டுகளை வாரம் ஒரு முறை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் பாத்திரங்களை தினமும், தீவனப் பாத்திரங்களை வாரத்திற்கு இரு முறையும் சுத்தம் செய்ய வேண்டும். முடிந்த வரை வெளி ஆட்களின் தொந்தரவு இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆட்களின் நடமாட்டம் மிக அதிகம் இருந்தால் நேசப்பறவைகள் முட்டையிடுவதிலும், அடை காப்பதிலும், குஞ்சுகளை பராமரிப்பதிலும் தொந்திரவாக அமைய நேரிடும். சில ஆண் நேசப் பறவைகள் சண்டையிடும் குணமுடையனவாக இருக்கும். இவை கூண்டிலுள்ள நேசப்பறவைகளுடன் சண்டையிடுவதுடன் பானைகளில் உள்ள முட்டைகளையும், குஞ்சுகளையும் வெளியே தள்ளிவிடும்.

இப்படிப்பட்ட சண்டை குணமுடைய நேசப்பறவைகளை சிறிது நேரம் செலவிட்டு கண்காணித்து கூண்டை விட்டு நீக்கி விடுவது நல்லது. நோய் வாய்பட்ட பறவைகள் இருப்பின் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி தனியாக வைத்து கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் அளித்து குணமான பின் மற்ற பறவைகளுடன் சேர்த்து விட வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொழுது கூண்டிலுள்ள மற்ற பறவைகளுக்கும் 5 நாட்கள் வரை சிகிச்சை அளிக்க வேண்டும்.

நேசப்பறவைகள் வளர்ப்புப் பொருளாதாரம்

நேசப்பறவை ஒரு ஜோடி விலை ரூ. 250 க்கு வாங்கலாம். வீட்டிலிருக்கும் பயன்படாத அலுமினியம், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்களை தண்ணீர் மற்றும் தீவனப் பாத்திரங்களாக பயன்படுத்தலாம். ஒரு கிலோ தீவனத்திற்கு ரூ. 30 செலவாகும். ஒரு ஜோடி காடை ஒரு மாத காலத்தில் 500 கிராம் தீவனம் உட்கொள்ளும். சமையலுக்கு பயன்படாத கொத்தமல்லி, கீரைகள் மற்றும் வீட்டிற்கு வெளியே வளரும் பச்சைப்புல், அருகம்புல் போன்றவற்றை பசுந்தீவனமாக பயன்படுத்தலாம்.

3 மாத வயதில் ஒரு ஜோடி குஞ்சுகள் ரூ. 225 க்கு விற்கப்படுகிறது. ஒரு பெண் நேசப்பறவை ஒரு முறைக்கு சராசரியாக நான்கு குஞ்சுகள் வீதம் ஒரு வருடத்திற்கு 4 முறை குஞ்சுகள் பொரிப்பதன் மூலம் வருடத்திற்கு 16 குஞ்சுகள் கிடைக்கும். 20 பெண் நேசப்பறவைகளை வளர்க்கும் பொழுது மொத்தம் 320 குஞ்சுகள் ஒரு வருடத்திற்கு விற்கலாம்.

நிலையான முதலீடு ரூ

1. கூண்டுகள் அமைக்க                                                                      5,000
2. நேசப்பறவைகளின் விலை (ரூ. 250 x 20 ஜோடி)                     5,000
———
மொத்தம்                    10,000
———
நடைமுறைச்செலவு
தீவனம் (ரூ 30 x 5கிலோ மாதத்திற்கு x 12 மாதம் )                     1,800
கடல்நுரை மற்றும் மருத்துவச்செலவு (ரூ 50 x 12 மாதம்)          600
——–
2,400
——–
வருமானம்

நேசப்பறவைக் குஞ்சுகளை விற்பதன் மூலம் =                        36000
( 160 ஜோடிகள் x ரூ 225 )

நிகர வருட வருமானம்
= வருமானம்    –    மொத்தச்செலவு
=       36,000/-     –          2,400/-             =        ரூ. 33,600/-

நிகர மாத வருமானம்                                                       =        ரூ. 2800/-

வெறும் ரூ. 10,000 முதலீட்டில் 20 ஜோடி நேசப்பறவைகளை வளர்க்கும் பொழுது மாத வருமானமாக குறைந்தது ரூ 2800 கிடைக்கும் பொழுது நேசப்பறவைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பொழுது அதிக வருமானம் பெற முடியும்.

கட்டுரை ஆக்கம்:

முனைவர்.இரா. உமாராணி
பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடைப்பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம்,
திருப்பரங்குன்றம், மதுரை- 625 005
தொலைபேசி எண்: 0452 2483903

Show More

Leave a Reply

Your email address will not be published.

19 − ten =

Related Articles

Close