
கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு அருகே நன்மை தருவார் கோயில் மேல மாசி வீதியின் தென் கோடியில் அமைந்துள்ளது. இது பழமைமிக்க சிவ வழிபாட்டுத் தலமாகும். இக்கோயில் மேற்குத் திசையை நோக்கி அதைந்த சிறப்புடையது.
சிவபெருமான் சுந்தரபாண்டியனாக அவதாரமெடுத்து மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செலுத்திய போது சோமசுந்தரக் கடவுளே இக்கோயிலை அமைத்ததாக திருவிளையாடற்புராணம் கூறுகிறது. இக்கோயிலை விளங்கும் சிவலிங்கத்திற்குப் பின்னால் மீனாட்சி ‡சுந்தரேசுவரர் திருவுருவச் சிலைகள் உள்ளன.
இக்கோயிலை மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1238) கி.பி.1218 இல் கட்டியதாக திருப்பணி மாலை (பாடல் 9) கூறுகிறது. இக்கோயிலின் இறைவி நடுவூர். நாயகி எனப்படும் மத்தியபுரி அம்மன் ஆவார். இறைவன், இறைவி ஆகிய இருவரது கருவறைகளும் முற்றிலும் கல்லால் ஆனவை.
சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்தவை. இக்கோயில் சிவகங்கை சமஸ்தானத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. நன்மை தருவார் கோயில் அமைந்துள்ள தெரு நன்மை தருவார் கோயில் தெரு எனப்படும்.