செய்திகள்வரலாறு

தே.கல்லுப்பட்டி அருகே தி.குண்ணத்தூரில் 500 ஆண்டு பழமையான வளரி வீரன் சிற்பம் கண்டுபிடிப்பு

500 year old Valari Veeran sculpture discovered at T.Kunnathur near T.Kallupatti

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தி.குண்ணத்தூரில் 500 ஆண்டு பழமையான வளரி வீரன் சிற்பம் கண்டறியப்பட்டது.

மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் முனைவர் லட்சுமண மூர்த்தி, ஆய்வாளர் அனந்த குமரன் தி.குண்ணத்தூர் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது கிபி 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வளரி வீரன் கற்சிற்பம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் முனீஸ்வரன் கூறியதாவது;

பழமையும் பெருமையும் வாய்ந்த இவ்வூர் பிற்கால பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சிறு குன்றத்தூர் என்றும் காலப்போக்கில் குண்ணத்தூர் என்று அழைக்கப்பட்டது இவ்வூரின் தெற்கே தேவன்குறிச்சி மலைப்பகுதியை பெருங்குன்றத்தூர் என்றும் கலிங்கத்தரையர் பெயர் கொண்ட குறுநில மன்னர் ஆட்சி செய்தாக கல்வெட்டு செய்தி சமீபத்தில் கண்டறியபட்டவை மற்றொரு சிறப்பு

வளரி

வளரி என்பது பண்டைய காலத்தில் தமிழர்கள் பயன்படுத்தப்படும் ஒரு வகை ஆயுதம். குறிப்பாக கால் நடைகளை திருடிச் செல்லும் திருடர்களை பிடிப்பதற்கு,போர்க்களத்தில் பயந்து ஓடி தப்பிப்பர்வர்களை உயிருடன் பிடிப்பதற்கு வளரியை பயன்படுத்தினார்கள். வளரியை கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி விசிறி வீசும் போது பிடிபடுவார்கள். வளரியை வளைதடி,திகிரி, பாறாவளை,சுழல்படை,கள்ளர்தடி,படை வட்டம் என்று அழைத்தனர்.

நடுகல்

இவ்வூரில் கண்டறியப்பட்ட நடுகல் சுமார் 41 இன்ச் உயரம் 27 இன்ச் அகலம் கொண்டவை. மூன்று அடுக்கு கோபுரம் தோரணவாயில் வடிவில் கொண்டு கீழ்ப்பகுதியில் ஆண் மற்றும் இரண்டு பெண் சிற்பங்கள் செதுக்கப்பட்ட இருக்கிறது.

இச்சிற்பம் வளரி வீரன் என்பதற்கு சான்றாக நடுப்பகுதியில் வீரன் கையில் ஈட்டியை பிடித்தவாறு இடது கையில் வளரியை பிடித்தவாறு வலது கால் சற்று சாய்ந்து முழங்கால் தெரியும் படியும் இறுகிய காலும் காலில் கழலும் கொண்டு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பத்தை வீரன் உருவம் விரிந்த மார்பு கையில் காப்பு நீண்ட காதும் தேய்ந்த முகத்துடன் காணப்படுகிறது வளரி தன் கையில் ஏந்தி இருப்பதால் இச்சிற்பத்தை வளரி வீரன் சிற்பம் என்று அழைக்கப்படுகிறது.

வீரன் வலதுபுறத்தில் பெண் சிற்பம் அணிகலன் அணிந்து அலங்காரத்துடன் சரிந்த கொண்டையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண் சிற்பம் வலது கையை தொடையில் வைத்து இடது கையை செண்டு ஏந்தி இருக்கிறாள். மற்றொரு பெண் சிற்பம் வீரன் இடதுபுறத்தில் இடது கையை தொடையில் வைத்து வலது கையை செண்டு உயர்த்தி பிடித்துள்ளார்.

இரண்டு பெண் சிற்பமும் ஆடை அலங்காரத்துடன் கொண்டை சரிந்து காணப்படுகிறது .இச்சிற்பத்தை பார்க்கும்போது வளரி வீரன் இறந்த பிறகு இருவரும் உடன்கட்டை ஏறியதற்கு சான்றாக அறியமுடிகிறது.

தமிழகத்தின் தென்பகுதியில் சிவகங்கை ராமநாதபுரம் திருநெல்வேலி பகுதியில் வளரி வீரன் சிற்பம் அதிகமாக காணப்பட்டாலும் மதுரை மாவட்டத்தை பொறுத்த மட்டில் உசிலம்பட்டி மற்றும் அதன் மேற்குப் பகுதியில் கண்டறியப்பட்டு இருக்கிறது.

தற்போது மதுரையின் தெற்கு பகுதியில் வளரி வீரன் சிற்பம் இருப்பது கூடுதல் சிறப்பு. வளரி ஆயுதம் தமிழகத்தில் தெற்கு பகுதியில் பரந்து காணப்பட்டு இருந்ததற்கு மற்றொரு சான்று என்றார்.

 

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
https://www.hellomadurai.in/wp-content/uploads/2022/09/547.mp4
Back to top button
error: