
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் அமைந்துள்ள கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் வழிபாடு செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவையொட்டி, கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.
திருமஞ்சனமாகி தர்மகர்த்தா மண்டபத்தில், எழுந்தருளல் நிகழ்ச்சி, அணிகலன்கள் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை கோயிலிலிருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காலை சுமார் 10 மணி அளவில் மேளதாளம் அதிர்வேட்டுகள் முழங்க வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
அப்போது, பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் சுவாமியை வரவேற்றனர். தொடர்ந்து ,ஐந்து முக சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
நாளை புதன்கிழமை மண்டுக மகரிஷிக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழிய பாண்டியன் மற்றும் பலர் செய்திருந்தனர். சமயநல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.