
மதுரை மக்களின் மாலைப் பொழுதுகளை மங்களகரமாக்குவது கோவில்கள் என்றால் மகிழ்ச்சிகரமாக்குவது பூங்காக்கள்தான். மதுரை பத்தயத்திடல் சாலையின் வடபுறம் மின்வாரிய அலுவலகத்தை அடுத்து இருந்த பிரமாண்ட பூங்கா புல்வெளியுடனும், மலர்களுடனும் மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை குழந்தைகள், பெரியவர்கள் என மக்கள் கூட்டத்தால் நிறைந்து இருக்கும். முந்தி வந்தவர்களுக்கே சிமிண்ட் ஆசனங்களில் இடம் கிடைக்கும் என்ற நிலை இருந்த காலம் அது.
பூங்காவின் மையத்தில் இருக்கும் கம்பத்தில் ஒலி பெருக்கியில் ஒலிபரப்பாகும் இரவுச் செய்திகள் கேட்பதற்கென்றே பூங்காவிற்கு வருபவர்களும் உண்டு. ஆகாஷவாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண ஸ்வாமி என்ற காந்தக்குரல் செய்தி வாசிப்பாளருக்கு ரசிகர்கள் அதிகம். தற்போது அந்த பூங்கா இல்லை என்பது நெருடலான நிஜம்.
அழகர் கோவில் சாலை பாண்டியன் ஹோட்டலை அடுத்து சுப்ரமணிய பாரதி பூங்கா, நரிமேடு சிங்கராயநகர் பூங்கா, தமுக்கத்தை அடுத்த ராஜாஜி பூங்கா, காந்தி மியூசியம் பூங்காஅனைத்தும் வைகை வடகரை மக்களின் மாலைப் பொழுதை ரம்மியமாக்கிய காலமது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலைச் சுற்றி மேற்கே ஜான்சி ராணி பூங்கா, கூடலழகர் கோவில் பூங்கா, வடக்கே காந்தி பூங்கா, கிழக்கே மன்னர் திருமலை நாயக்கர் மஹால் பூங்கா என நன்கு பராமரிக்கப்பட்டு பூங்கா மாநகர் என சொல்லுமளவு பொலிவோடு இருந்தது தூங்கா நகரம்.
மதுரை மாநகரில் சமீபகாலத்தில் உருவாகி சிறப்பாக நிர்வகிக்கப்படும் பூங்காக்களில் மதுரை மாநகராட்சி பூங்கா, வண்டியூர் கண்மாய் பூங்கா, வில்லாபுரம் பூங்கா, மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் போன்றவை மாலைப் பொழுது மட்டுமின்றி காலைவேளையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யுமிடமாகவும் மக்களின் பேராதரவைப் பெற்றிருப்பது மகிழ்ச்சிகரமான விசயம்.
அன்றிலிருந்து இன்றுவரை பெரும்பாலான பூங்காக்கள் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தாலும் மக்கள் தொலைக்காட்சி மோகத்தால் மாலைப் பொழுதுகளில் வீட்டிலேயே முடங்கி விடுவதால் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. அடிக்கடி பூங்காக்களுக்கு சென்றால் அடிக்கடி மருத்துவமனைகளுக்கு செல்லவேண்டியது இருக்காது என்பதே உண்மை.