திருமலை நாயக்கர் மஹாலில் மழலையர்களுக்கான செஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி | கலெக்டர் பார்வையிட்டு பரிசுகள் வழங்கினார்
Chess awareness program for Kindergartners at Tirumala Nayak Mahal The Collector visited and gave gifts

மதுரை மாவட்டம், மன்னர் திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெற்ற மழலையர்களுக்கான ஆடை, அலங்கார ஒலிம்பியாட் செஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை (22.07.2022) மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஸ் சேகர், பார்வையிட்டு பரிசுகள் வழங்கினார்.
தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற 28-தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 187 நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
மிகச் சிறப்பு வாய்ந்த சர்வதேச அளவிலான இந்த போட்டியை தமிழகத்தில் நடத்தப்படுவது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விசயமாகும். தற்போது, சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் செஸ் போட்டியினை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடர்பாக குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே செஸ் விளையாட்டில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் செஸ் வடிவிலான உடைகளை அணிந்து அலங்கார அணிவகுப்பு நடத்தினர். மன்னர் திருமலை நாயக்கர் மஹாலுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
மதுரையில் மாவட்ட நிர்வாகத்துடன் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஒலிம்பியாட் ஜோதி வருகின்ற 25.07.2022-அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து நமது மதுரை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. இதனை சிறப்பான முறையில் வரவேற்கும் விதமாக கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், செஸ் போட்டி கிராண் மாஸ்டர் பஞ்சநாதன், அனு உட்பட பலர் கலந்து கொண்டனர்.