திருமங்கலம் வாக்கு எண்ணும் மையம் பணிகள் குறித்து மதுரை கலெக்டர் ஆய்வு
Madurai Collector inspects the work of Thirumangalam Vote Counting Center
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் மையமான திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் மரு.எஸ்.அனீஷ் சேகர் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகள், 3 நகராட்சிகளுக்குட்பட்ட 78 வார்டுகள், 9 பேரூராட்சிகளுக்குட்பட்ட 144 வார்டுகள் என மொத்தம் 322 காலி இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் 28.01.2022-அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவு 19.02.2022-அன்றும், வாக்கு எண்ணிக்கை 22.02.2022-அன்றும் முறையே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணும் பணிகளுக்காக மதுரை மாவட்டத்தில் மொத்தம் 9 வாக்கு எண்ணும் மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நகராட்சிக்கு உட்பட்டு 22,809 ஆண் வாக்காளர்கள், 24,927 பெண் வாக்காளர்கள், ஒரு மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 47,737 வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் வாக்குப் பதிவுக்காக 14 இடங்களில் 49 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையமாக திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
குறிப்பாக, வாக்கு எண்ணும் மையத்தில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உறுதி செய்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பேரையூர், டி.கல்லுப்பட்டித மற்றும் எழுமலை ஆகிய பேரூராட்சிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்தல் வாக்கு எண்ணும் மையமான பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேறகொண்டார்.
இந்த ஆய்வின்போது, திருமங்கலம் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் / ஆணையாளர் தெரன்ஸ் லியோன், காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.