
மதுரை மாவட்டம் திருமங்கலம் புதுநகர் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் ராஜவேல் – ஜெயந்தி தம்பதியினர். இவர்களுக்கு 11 வயதில் ஆராதனா என்ற மகள் உள்ளார். கணவன் , மனைவி இருவருக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்கின்றனர். மகள் ஆராதனா, தாய் ஜெயந்தியுடன் புதுநகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர்.
ஜெயந்தி புதிதாக நிலம் ஒன்று வாங்குவதற்காக, உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் ரூ.35 லட்சம் வரை கடனாகப் பெற்று வீட்டில் வைத்துவிட்டு, கடந்த 10-ந் தேதி ஆலம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டின் மாடியில் குடியிருக்கும் ரத்தினம் என்பவர் வீட்டிற்கு பின்புறம் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு, ஆலம்பட்டியில் உள்ள ஜெயந்திக்கு தகவல் அளித்தார்.
அவர் வீட்டிற்க்கு வந்து அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது, கதவின் தாழ்ப்பாள் மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் பீரோவில் இருந்த 35 லட்ச ரூபாய் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஜெயந்தி திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.