
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அனுப்பப்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தில் கட்டி முடித்து தண்ணீர் வசதி செய்து கொடுக்காமல் பயனில்லாமல் உள்ள பெண்கள் கழிப்பறை மற்றும் குளியலறை போன்றவைகளும், தெருக் குழாய், சாக்கடை, சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாகவும், கிராம சாவடி, அங்கன்வாடி சமையலறை அனைத்தும் வீணாக சிதைந்து வரும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தற்போது கிராமத்தில் உள்ள வண்ணன் குளம் கண்மாய் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக் கண்மாயில் ரூ.21 லட்சம் செலவில் கரை பலப்படுத்தும் பணியில் முறைகேடுகள் நடப்பதாகவும், கரையை பலப்படுத்துவதற்கு போதிய கட்டுமான பொருட்கள் இன்றி பலகீனமாக கரையை அமைப்பதாகவும் கூறி, அரசு பணத்தை வீணடிப்பதாக கிராம மக்கள் கண்மாய் கரையில் ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிராமத்திற்கு பெண்களுக்கு தனியாக கழிப்பறை, குளியலறை செயல்படாததாலும், காலை கடன்களை பெண்கள் கண்மாய் பகுதியில் வெற்றிடத்தில் பீதியில் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.