அமைச்சர்செய்திகள்

திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, மருத்துமனையினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

Minister M. Subramanian inspected Thirumangalam Government Homeopathic Medical College, Hospital

மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனையை (19.08.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனையானது பழம்பெருமை வாய்ந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாகும்.

1975-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி 3 1/2 ஆண்டு டிப்ளமோ படிப்பாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் 1982-ஆம் ஆண்டு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியானது சென்னை கீழ்ப்பாக்கத்திலிருந்து திருமங்கலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

1975-ஆம் ஆண்டு தொடங்கி 3 1/2 ஆண்டு டிப்ளமோ படிப்பாக இருந்த ஹோமியோபதி மருத்துப் படிப்பானது, தற்பொழுது 5 1/2 ஆண்டுகளுக்கான பட்டபடிப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுடொன்றுக்கு 50 மாணவர்கள் சேர்க்கை என்கின்ற வகையில் தற்போது வரை 300 மாணவ, மாணவியர்கள் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனையில் பயின்று வருகிறார்கள்.

திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துமனை 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை மருத்துவக்கல்லூரி என்பது இப்பகுதி மக்களுக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு அவசியமான ஹோமியோபதி சிகிச்சைகளுக்கு உறுதுணையாக சேவையாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த மருத்துவக்கலூரியை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலை உயர்த்தப்பட்டு இந்தப் பகுதி தாழ்வான பகுதியாக மாறிவிட்டது.

தாழ்வான பகுதியாக மாறிவிட்ட சூழ்நிலையால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் மாதக்கணக்கில் இங்கே மழைநீர் தேங்கி இருக்கின்ற அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

மாதக்கணக்கில் இங்கே மழைநீர் தேங்கி இருக்கின்ற காரணத்தினால் இங்கு அனைத்து கட்டடங்களும் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. எனவே, வகுப்பறைகள், ஆய்வரங்கங்கள், அலுவலக அறைகள் ஆகியவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிடுள்ளது.

இக்காரணத்தினால் கடந்த ஓராண்டிற்கும் மேலாக மாணவ, மாணவியர்கள் கல்வியை கருத்திற்கொண்டு ஒரு ஆய்வகத்தில் எவ்வித வசதியும் இல்லாத இடத்தில் வகுப்புகளை நடத்த வேண்டிய சூழல் நிலவி வருகின்றது.

எனவே, மாணவ, மாணவியர்கள் தொடரந்து கடந்த ஓராண்டிற்கும் மேலாக மக்கள் நல்வாழ்வுப்பணிகளை ஆய்வு செய்வதற்கு மதுரை மாவட்டத்திற்கு வருகை தருகின்ற போது இப்பழுதுகளை உடனடியாக சீர்செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை தொடர்ந்து கோரிக்கையாக வைத்த வண்ணம் இருந்தனர்.

இப்பகுதியில் செயல்பட்டு வரும் உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை இப்பகுதியில் ஒரு கால்வாய் அமைத்தால் தண்ணீர் தேக்கம் இருக்காது என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

கால்வாய் அமைத்துவிட்டு தற்பொழுது இருக்கின்ற கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்களை கட்டலாம் என்கின்ற கோரிக்கையினை வைத்திருக்கிறார்கள்.

கால்வாய் அமைத்தாலும் மழைக்காலங்களில் இங்கே நீர்தேக்கம் இருக்கும் என்ற இரண்டாவது கருத்துருவும் உள்ளது. எனவே, பக்கத்தில் இருக்கின்ற ஓரிரு இடத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்வாகத்தாலும், இப்பகுதியில் இருக்கின்ற நகராட்சி நிர்வாகத்தாலும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

எனவே, அந்த இடத்தில் புதிய கட்டடங்களை கட்டி இடமாற்றிக் கொள்ளலாம் என்கின்ற கருத்துரு ஒன்றும் உள்ளது. இரண்டு கருத்துருக்களையும் ஆராய்வதற்கும் இன்றைய தினம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மதுரை தியாகராஜர் கல்லூரி தொழில்நுட்பப் அலுவலர்களை அழைத்து வந்து புதிய கால்வாய் கட்டுவதினால் மழைநீர் தேக்கம் இருக்காதா என்பதை ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

10 நாட்களில் தொழில்நுட்பப் பணியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர்தலைமையில் விரைவில் இந்த பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இந்த ஆய்வில், கால்வாய் அமைத்தாலும் மழைக்காலங்களில் இப்பகுதி பாதிப்புக்கு உள்ளாகும் என்று தொழில்நுட்பப் அலுவலர்களால் உறுதி செய்யப்பட்டால், இக்கட்டத்தினை இடம்மாற்றம் செய்யப்படுவதற்கான மற்றொரு கருத்துருவும் செய்யப்பட்டிருக்கிறது.

இப்பகுதி நகராட்சி நிர்வாகத்தினர் பக்கத்தில் 2 கிலோ மீட்டர்க்கு தூரத்தில் 6 அல்லது 7 ஏக்கர் நிலப்பரப்பில் தரிசுநிலம் இருக்கின்றது. அப்பகுதியில் இக்கட்டடத்தை இடம்மாற்றிக் கொள்ளலாம் என்கின்ற கருத்தை கூறியுள்ளார்கள்.

அந்த இடத்தினையும் இன்றைய தினம் ஆய்வு செய்ய உள்ளோம். அதுமட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றொரு இடத்தினையும் தேர்வு செய்து வைத்திருக்கின்றார். மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி நிர்வாகத்தினர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட இடங்களை இன்றைய தினம் ஆய்வு செய்யப்பட உள்ளோம்.

எனவே, இக்கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரிடமும் கருத்துக்களைக் கேட்டு இந்த ஹோமியோபதி கல்லூரி திருமங்கலத்திலேயே நீடிக்கின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்.

புதிய கட்டடங்கள் இங்கேயே கட்டினாலும் அல்லது பக்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் கட்டினாலும் இக்கட்டடப் பணிகளுக்காக 50 அல்லது 60 கோடி ரூபாய் தேவைப்படும்.

நிதி ஆதாரத்திற்கு ஒன்றிய அரசின் ஆய்வு அமைச்சரகத்திற்கு கோரிக்கை வைக்க வேண்டும். அந்தவகையில், இந்த வாரத்திற்குள்ளாக தயாராக உள்ள இந்த கருத்துருவை பெற்று வருகின்ற செப்டம்பர் முதல் வாரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறைதுறையின் செயலாளரும், இந்திய மருத்துவத்தின் இயக்குநருடன் டெல்லிக்கு செல்ல இருக்கின்றோம்.

அங்கே மதுரை எய்ம்ஸ் மருத்துவனை கட்டுமானப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டுமென்றுயும், தமிழகத்தில் தென்காசி, இராணிப்பேட்டை, பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டத்தை கட்ட வேண்டும் என்ற அவசியத்தையும் வலியுறுத்தி கோரிக்கை வைக்க உள்ளோம்.

அதேநேரத்தில், அன்றைய தினமே ஆய்வு அமைச்சரகத்தின் அமைச்சரையும் சந்தித்து திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி புதிதாக அமைவதற்காகவும், புதிய கட்டங்கள் கட்ட வேண்டும், இக்கல்லூரியில் படிக்கின்ற 300 மாணவ, மாணவியர்களும் தங்குவதற்கான விடுதிகளும் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்க இருக்கின்றோம்.

இக்கட்டட கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஆதாரம் கிடைக்கப்பெற்றவுடன் கட்டடங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இப்பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் ஹோமியோபதி கல்லூரி திருமங்கலத்தில் செயல்படுவதற்கு 1 1/2 ஆண்டு காலம் ஆகும். மேலும், தற்பொழுது இருக்கின்ற இந்த கட்டத்தில் மாணவ, மாணவியர்கள் படிப்பை தொடர்வது என்பது சிரமமான செயலாகும்.

எனவே. மாணவ, மாணவியர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதில் அவர்கள் மதுரையை ஒட்டியுள்ள மருத்துவக் கல்லூரிகளில் எங்களுடைய கல்வி தொடர ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்திய மருத்துவத்தின் இயக்குநர் இன்றைய தினமும், நாளைய தினமும் இங்கேயே தங்கி இருந்து பக்கத்தில் இருக்கின்ற விருதுநகர் அல்லது திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த மருத்துவக்கல்லூரிகளில் இந்த 300 மாணவ, மாணவியர்கள் படிப்பதற்கான வாய்ப்புகளும், அவர்கள் தங்குவதற்கான விடுதிகளும் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்யப்பட உள்ளார்கள்.

இந்த ஆய்விற்குப் பின்னர் இக்கல்லூரியின் முதல்வர் மற்றும் மாணவ பிரதிநிதிகளிடம் இந்த கருத்தை தெரிவித்து, முடிந்தால் மாணவ பிரதிநிதிகளையும் உடன் அழைத்து சென்று அவர்களுடைய ஒப்புதலையும் பெற்று இந்த உடனடி இடமாற்றம் செய்யப்பட இருக்கின்றது.

மருத்துவத்துறையில் 4,300 மருத்துவப் பணியாளர்கள் பணிக்கு நியமனம் செய்யப்படுவதற்கான பணி தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தற்பொழுது 200 வகையான பணி நியமனங்கள் நடைபெறவிருக்கின்றது. அவற்றில் 2 வகையான பணிநியமனங்கள் முடிவடைந்துள்ளது.

10 நாட்களுக்குள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒப்புதலோடு இந்திய மருத்துவத்தின் சார்பில் 77 மருந்தாளுநர்ளும் மக்கள் நலத்துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட கள உதவியாளர்கள் பணிநியமனமும் செய்யப்பட இருக்கின்றது. செப்டம்பர் மாத இறுதிக்குள் ஒவ்வொரு துறையாக பணிநியமனங்கள் முழுமையாக நிரப்பப்படும்.

கடந்த வாரம் முதன்முறையாக மக்கள் நல்வாழ்வுத்துறை, நகர்ப்புற உள்ளாட்சித்துறை, ஊரக உள்ளாட்சித்துறை ஆகிய மூன்று துறைகளையும் ஒருங்கிணைத்து ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட உயர் அலுவலர்களுடான கூட்டம் ஒன்று சென்னையில் நடத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் 3 துறை அமைச்சர்களும் கலந்து கொண்டு மழைக்காலங்களில் வருகின்ற நோய்களான டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற பல்வேறு நோய்களிலிருந்து மக்களை காப்பதற்கு அனைத்துத்துறைகளும் ஒருங்கிணைந்து எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில். அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட அளவிலான இந்த மூன்று துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும் ஆய்வு நடத்தி களப்பணியாளர்களை பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார்கள். மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களினால் ஏற்படும் பாதிப்பு தமிழகத்தில் பெரிய அளவில் இருக்காது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்ந ஆய்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில் குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஸ்சேகர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: