சினிமாவீடியோ

திமுகவுக்கு பதிலடி கொடுத்த எம்ஜிஆர் தொப்பி

MGR Cap | DMK | ADMK | Political | தமிழ் சினிமா

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் இரட்டை இலைக்கு உள்ள முக்கியத்துவம் போல் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தொப்பிக்கு தனியிடம் உண்டு. எம்.ஜி.ஆருக்கு விதவிதமான தொப்பி கண்ணாடிகள் அணிவதில் சிறுவயதிலிருந்தே மிக விருப்பம். சினிமாவில் நடிக்கத்துவங்கிய காலத்தில், பொது இடங்களில் ரசிகர்களின் அன்புப்பிடியில் இருந்து தப்பிக்க தனது பாகவதர் கிராப் தலைமுடியை மறைக்க ஒரு துண்டை தலைப்பாகை போல தலையில் கட்டி லாவகமாக மறைத்துக்கொள்வார்.

திரைப்பட நடிகரானபின் தான் இளமையோடும் அழகோடும் தெரிவதற்கும் கதாபாத்திரத்தை வித்தியாசப்படுத்திக்காட்டவும் பல படங்களில் விதவிதமான தொப்பி அணிந்து நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரைப்போல் வேறொரு நடிகருக்கு தொப்பி பொருந்தியிருக்குமா என்பது சந்தேகமே.

காவல்காரன் படத்தின்போதுதான் எம்.ஜி.ஆர் சுடப்பட்டிருந்தார். இதனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பின் எடுக்கப்பட்டவை. இதனால் பல காட்சிகளில் முகம் சோர்ந்தும் குரல்வன்மை கரகரவென கவர்ச்சியில்லாமலும் இருக்கும்.

படத்தில், “நினைத்தேன் வந்தாய் நுாறு வயது” பாடல் எடுக்கப்பட்ட அன்று எம்.ஜி.ஆர் வித்தியாசமாக தெரிய, வெள்ளைத் தொப்பி அணிந்து சில காட்சிகளில் ஆடினார். பாடல்காட்சி முடிந்ததும் எம்.ஜி.ஆரிடம் அங்கிருந்தவர்கள், “அண்ணே, நீங்க தொப்பியில் 10 வயசு குறைஞ்சி தெரியறீங்க” எனப் புகழ்ந்து தள்ள, தன் இமேஜ் மீது எப்போதும் பெரிய அக்கறை கொண்ட எம்.ஜி.ஆருக்கு வெட்கமாகப்போய்விட்டது. தன் முகப்பொலிவும் கவர்ச்சியும் குறைந்துபோயிருந்ததாக வருத்ததத்தில் இருந்தவருக்கு இது பெரும் மகிழ்ச்சியை தந்தது. இதன்பின்னர் வந்த படங்களில் எம்.ஜி.ஆர் விதவிதமாக தொப்பிகளை தேடிப்பிடித்து பயன்படுத்தினார்.

வெள்ளை தொப்பி குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது, ஒன்று திரைப்படங்களில் மட்டும் அதுவரை தொப்பி பயன்படுத்திவந்தவருக்கு அடிமைப்பெண் திரைப்படம், நிரந்தரமாக தொப்பி அணியக் காரணமானது. படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது பாலைவனத்தில் நடந்த படப்பிடிப்பினால் எம்.ஜி.ஆர் சோர்ந்துபோனார்.

படப்பிடிப்பை காணவந்த நண்பர் ஒருவர் முதன்முதலாக புஸ்குல்லா எனப்படும் வெள்ளைத்தொப்பியை கொடுத்தார். ஜெய்ப்பூரின் கடும் வெயிலை தொப்பியினால்தான் எம்.ஜி.ஆரால் சமாளிக்கமுடிந்தது என்றும், அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். ராஜஸ்தான் சென்றபோது, அந்த மாநில முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா, எம்.ஜி.ஆருக்கு விருந்தளித்து கவுரவித்தார். அப்போது அவர் பரிசளித்த புசுபுசுவென்ற வெள்ளைத் தொப்பி, எம்.ஜி.ஆருக்கு அழகாக பொருந்தியது. அதிலிருந்துதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது.

படப்பிடிப்பு முடிந்தபின் எம்.ஜி.ஆர் அதன் பயன்பாட்டைக் கருதி தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களிலும் வெயிலை சமாளிக்க பயன்படுத்த ஆரம்பித்தார்.

‘தொப்பி’ எம்.ஜி.ஆர் வழக்கமான எம்.ஜி.ஆரை விட இளமையாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிய தொப்பியை அன்றுமுதல் நிரந்தரமாக்கிக் கொண்டார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு தொப்பி அடையாளமான வரலாறு இதுதான். கண்ணாடியை ஏற்கனவே அணிந்துவந்திருக்கிறார்.

பின்னாளில் எம்.ஜி.ஆர் இந்த தொப்பியின்றி வெளியிடங்களுக்கு வருவதையோ, படம் எடுப்பதையோ விரும்பியதில்லை. தொப்பி நிரந்தரமானபின் நெருக்கமான நண்பர்கள் குடும்ப உறவினர்கள் தவிர வேறுயாரிடமும் தொப்பியின்றி காட்சி தரமாட்டார். ஆரம்பத்தில் தொப்பிக் கடைகளில் ரெடிமேட் தொப்பிகளை அணிந்துவந்த எம்.ஜி.ஆர் ரசாக் என்ற தொப்பி தயாரிப்பாளரிடம் தனக்கென பிரத்யேகமாக தொப்பிகளை தயாரித்து தர கேட்டுக்கொள்ள, இவரே எம்.ஜி.ஆருக்கு இறுதிவரை தொப்பி தயாரித்துக் கொடுத்தார்.

எம்.ஜி.ஆரின் தொப்பி வழக்கத்துக்கு மாறான தன்மையில் தயாரிக்கப்படும். காஷ்மீர் போன்ற குளிர்பிரதேசங்களில் வளரும் வெள்ளை செம்மறி ஆட்டின் முடியை பதப்படுத்தி அதை பலகட்டங்களில் மேம்படுத்தி அவை தயாரிக்கப்பட்டன. இதனுள் 3 அடுக்குகளில் கேன்வாஸ் வைத்து தைக்கப்பட்டிருக்கும்.

சிறுசிறு வெளியே தெரியாத ஓட்டைகளினால் வெளிக்காற்று எளிதாக உள்ளே சென்றுவரும் என்பதால் தலையில் வியர்வையோ வேறு எந்த சங்கடங்களோ ஏற்படாது. அதிக எடை இல்லாத புஸ்புஸ் குல்லா தலையில் இருப்பதாகவே தெரியாது. அடிக்கடி தொப்பிகளை மாற்றும் இயல்புடைய எம்.ஜி.ஆர், மொத்தமாக அரை டஜன் தொப்பிகளை ஆர்டர் வரவழைத்து அவற்றில் தனக்கு பொருத்தமான 2ஐ மட்டும் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் அத்தனைக்கும் பணம் கொடுத்துவிடுவார்.

பின்னாளில் அவர் திமுகவிலிருந்து பிரிந்தபின் இந்த தொப்பி பெரும்பிரச்னையானது அவருக்கு. திமுக மேடைகளில் அவரை தொப்பித்தலையா என தரம் தாழ்ந்து கிண்டலடித்தது திமுக. தலை வழுக்கையை மறைக்கவே அவர் தொப்பி அணிவதாக அவர்கள் விமர்சனம் செய்தனர். பல சமயங்களில் ரசிகர்கள் என்ற போர்வையில் மேடையில் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிப்பதுபோல் அவரது தொப்பியை கீழே விழ வைக்க முயன்றனர் திமுகவினர்.

அப்படித்தான் மதுரையில் ஒருமுறை அவருக்கு மாலையணிவிக்கும் சாக்கில் அவரது தொப்பியை தட்டிவிட்டார் ஒரு திமுக மாணவர். ஆனால் படங்களில் மட்டுமல்ல நிஜமாகவும் தனக்கு ஸ்டண்ட் தெரியும் என்பதை அவரிடம் நிரூபித்தார் எம்.ஜி.ஆர். அதன்பிறகுதான் திமுகவினர் இந்த நேரடி சாகசத்திற்கு முற்றுப்புள்ளிவைத்தனர். ஆனால் மேடைகளில் தங்கள் தொப்பி விமர்சனத்தை கைவிடவில்லை.

இந்த சூழ்நிலையில், திமுகவின் இந்த அஸ்திரத்தை திமுகவுக்கு எதிராகவே செயல்படுத்திய சந்தர்ப்பம் ஒன்று நிகழ்ந்தது. 1983 ஆம் ஆண்டு மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அன்றைக்கு பரபரப்பான அரசியல் சூழலில் எதிர்கட்சியான திமுக எம்.ஜி.ஆர் அரசு மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றை வைக்கப்போவதாக எம்.ஜி.ஆருக்கு உளவுத்துறையிலிருந்து தகவல் போனது. அதேசமயம் தொப்பி பற்றிய தாக்குதல் உச்சத்தில் இருந்தநேரம் அது.

பேட்டியளித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் கருணாநிதியின் குற்றச்சாட்டு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ஆனால் எம்.ஜி.ஆர் பதிலைக் கூறாமல் ஒரு காரியம் செய்தார். மெல்ல தன் தலையிலிருந்து தொப்பியை கழற்றி மேஜைமீது வைத்தார். அவ்வளவுதான் அடுத்த நொடி புகைப்பட .ஃப்ளாஷ்கள் மின்னத் துவங்கின. மறுநாள் செய்தித்தாள்களில் தலைப்புச்செய்தி எம்.ஜி.ஆர் ‘தலைச் செய்தி’தான். எம்.ஜி.ஆரின் தொப்பியற்ற தோற்றத்தை வெளியிட்ட பத்திரிகைகள் கருணாநிதியின் குற்றச்சாட்டை கடைசிப்பக்கத்தில் முக்கியத்துவம் இன்றி வெளியிட்டன. அதுதான் எம்.ஜி.ஆரின் சாதுர்யம்.

1984 ம் ஆண்டு தஞ்சை சென்ற எம்.ஜி.ஆர் ராஜராஜசோழன் அரண்மனைக்கு சென்றபோது மயங்கிவிழுந்தார். அடுத்த சில தினங்களில் அவருக்கு உடல்நிலை பாதித்தது. அப்பல்லோவிலும் பின்பு அமெரிக்காவிலும் சிகிச்சையளிக்கப்பட்டபோது அவரது மூளையில் கட்டி இருந்தது தெரியவந்தது. நீண்டகாலமாக தலையில் தொப்பி அணிந்ததால் இது உருவானதாக சொல்லப்பட்டது.

1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ந்தேதி அதிகாலை தமிழகத்தை கண்ணீர் கடலில் மூழ்கவைத்தார் எம்.ஜி.ஆர். அரைநுாற்றாண்டு காலம் தமிழகத்தின் தவிர்க்கவியலாத தலைவராக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் உடலோடு காலம் முழுக்க அவர் நேசித்து அணிந்து மகிழ்ந்த தொப்பியையும் சேர்த்து அடக்கம் செய்தனர்.

தேர்ந்த ஒரு ஓவியரால் எம்.ஜி.ஆரை வரைய ஓரிரு நிமிடங்கள் போதும். ஒரு தொப்பியையும் கண்ணாடியையும் வரைந்தால் அது உங்களுக்கு எம்.ஜி.ஆராகவே தெரியும். ஆனால் இந்த இரு அடையாளங்களுமின்றி எம்.ஜி.ஆரை அடையாளப்படுத்த எக்காலத்திற்குமான ஒர் அடையாளம் உண்டு. அது எம்.ஜி.ஆர் தன் தலைக்கு அணிந்த தொப்பி அல்ல; தன் உள்ளத்தில் அணிந்த மனிதநேயம் ! நன்றி வணக்கம் மீண்டும் வேறு ஒரு சினிமா தகவலில் உங்கைள சந்திக்கின்றேன் இப்படிக்கு உங்கள் சினிமா ரசிகன்.

https://www.youtube.com/watch?v=KXiMdccYrMM

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: