தமுக்கம் மைதானத்தில் வரும் 14ந் தேதி முதல் அரசுப் பொருட்காட்சி – 2022 தொடக்க விழா | மதுரை கலெக்டர் தகவல்
Government Exhibition on the 14th at Tamukkam Ground - 2022 Opening Ceremony | Madurai Collector Information

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – 2022-யின் தொடக்க விழா வருகின்ற 14.05.2022-அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தகவல்.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளதாவது: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மதுரையில் கடந்த 2 ஆண்டுகளாக அரசுப் பொருட்காட்சி நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், நடப்பாண்டில் அரசுப் பொருட்காட்சியினை மிகச் சிறப்புடன் நடத்திட திட்டமிடப்பட்டு தமுக்கம் மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – 2022-யின் தொடக்க விழா வருகின்ற 14.05.2022-அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் அரசுப் பொருட்காட்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்ற உள்ளார்கள்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றவும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் தலைமையுரையாற்றவும் உள்ளானர்.
இவ்விழாவில் மதுரை மாநகராட்சி மேயர் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு அரசுத்துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தப் பொருட்காட்சியில், அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், அவற்றில் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக கண்கவரும் வகையில் அரங்குகள் இடம்பெற உள்ளன.
மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதேபோல, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன.
மேலும், தினந்தோறும் இன்னிசை கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அரசுப் பொருட்காட்சி 14.05.2022-அன்று தொடங்கி 45 நாட்கள் தினமும் மாலை 03.45 மணிமுதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும்.
அரசுப் பொருட்சியினை பொதுமக்கள் சிரமமின்றி கண்டுகளிக்க கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகத்தில் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிதல் போன்று அரசு வழங்கியுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி அரசுப் பொருட்காட்சியினை கண்டுகளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.