தமிழ்நாடு அரசின் ஓராண்டு நிறைவு சாதனை மலர்; மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் வெளியிட்டார்
One year anniversary of the Government of Tamil Nadu

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி ஓராண்டு சாதனை மலரை வெளியிடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வினை முன்னிட்டு மதுரை மாநகராட்சி அவனியாபுரத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிட பணி, சின்னகண்மாய் அனுப்பானடி பகுதியில் அடர்வனம் காடுகள் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடுதல், தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் எல்.இ.டி. வாகனம் மூலமாக திரையிடப்பட்டதை பொதுமக்களுடன் இணைந்து பார்வையிடுதல்,
மேலும் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு புதிய வாகனங்களை துவக்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.கா.ப.கார்த்திகேயன், துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் தலைமையில் (07.05.2022) நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொது சுகாதார துறைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைகளில் பொதுமக்களின் நலனுக்காக தினந்தோறும் மருத்துவ பரிசோதனைகள், தடுப்பூசிகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை, குழந்தைகளுக்கான தடுப்பூசிகள், பொது மருத்துவம், தொற்றா நோய்களுக்கான மருத்துவம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மதுரை மாநகராட்சி பகுதிகளான அவனியாபுரம், வில்லாபுரம், பெருங்குடி, பெரியார் நகர், தெற்குவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கு அரசு இராசாசி மருத்துவமனை அல்லது நகரத்தின் மையத்தில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
எனவே அப்பகுதிவாழ் மக்களின் வசதிக்காக மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.100 அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
இம்மருத்துவ மனையில் மகப்பேறு அறை, ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு, செவிலியர் அறை, மருந்தகம், அலுவலக அறை, மருந்து இருப்பு அறை, காத்திருப்போர் அறை, ஆலோசனைஅறை, ஆய்வகம், மருந்துகள் செலுத்துமிடம், மருத்துவ அலுவலர்கள் அறை, கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சுமார் 4500 சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது.
இம்மருத்துவமனை கட்டப்படுவதன் மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 45000 பொதுமக்கள் பயன் அடைவார்கள். மேலும் வில்லாபுரம் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு கூடுதல் கட்டிடங்களுடன் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி புதுராமநாதபுரம் ரோடு சின்னக்கண்மாய் அனுப்பானடி பகுதியில் அடர்வனக்காடுகள் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை மாண்புமிகு மேயர், ஆணையாளர், துணை மேயர் ஆகியோர் நட்டு வைத்தார்கள்.
மேலும் பெரியார் பேருந்து நிலையத்தில் எல்.இ.டி.வாகன திரையில் தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் திரையிடப்படுவதை மேயர், மாநகராட்சி ஆணையாளர், துணை மேயர் ஆகியோர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து மதுரை மாநகராட்சி செல்லூர் வாகன காப்பகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 15வது மூலதன நிதியின் கீழ் ரூ.2.93 கோடி மதிப்பீட்டில் 40 திடக்கழிவு மேலாண்மை இலகுரக வாகனங்கள் மற்றும் ரூ.93.75 லட்சம் மதிப்பீட்டில் 8 மண் அள்ளும் வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது.
இவ்வாகனங்களை மேயர், மாநகராட்சி ஆணையாளர், துணை மேயர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இன்று முதல் புதிய வாகனங்கள் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் சுவிதா, பாண்டிச்செல்வி, முகே.சர்மா, உதவி ஆணையாளர்கள் தட்சிணாமூர்த்தி, மனோகரன், நகர்நல அலுவலர் மரு.ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர்கள் முனீர்அகமது, கந்தப்பா, மயிலேறிநாதன், உதவிப் பொறியாளர் (வாகனம்) சாலமன், சுகாதார அலுவலர்கள் விஜயகுமார், சிவசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர்கள் எ.முத்துலெட்சுமி, கா.தமிழ்ச்செல்வி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.