
தனித்தமிழ் இயக்கத்திற்கு பாடுபட்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (06.07.2022) மதுரை மாவட்டம், விளாச்சேரியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் நினைவில்லத்தில் அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தனித்தமிழ் இயக்கத்திற்கு பாடுபட்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்கள் மதுரை மாவட்டம் விளாச்சேரியை சேர்ந்த கோவிந்தசிவனார் – லெட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு 06.07.1870-அன்று பிறந்தார்.
பரிதிமாற் கலைஞர் அவர்கள் இளமை முதலே இலக்கண இலக்கியங்களையும், ஆங்கிலம் மற்றும் தத்துவ நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். நம் அன்னை மொழியாம் அருந்தமிழ் மொழியைச் செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்று முதற்குரல் கொடுத்தவர்.
மேலும், சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் நீக்கப்பட்டபோது அதை மீண்டும் சேர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழுக்குப் பெருமை சேர்த்த பரிதிமாற் கலைஞர், தமது 33-ஆம் வயதில் 1903-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 2-ஆம் நாள் இயற்கை எய்தினார்.
அன்னை மொழியாம் அருந்தமிழ் மொழியைச் செம்மொழி என நிலைநாட்ட பாடுபட்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் மாண்பை உலகறியச் செய்யும் நோக்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக மதுரை மாவட்டம் விளாச்சேரியில் நினைவில்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அன்னாரது பிறந்த நாளான ஜ_லை 6-ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 152-வது பிறந்த தினமான இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் விளாச்சேரியில் உள்ள தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவில்லத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி, மேற்கு வட்டாட்சியர் கிருஷ்ணன் அவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் (விளாச்சேரி) முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.