செய்திகள்போக்குவரத்து

தனியார் ரெயில்சேவையை கண்டித்து மதுரை ரெயில் நிலையம் முன்பு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

Trade unions protest in front of Madurai railway station condemning private rail service

தென்னக ரெயில்வேயின் தனியார் ரெயில் சேவையை கண்டித்து ரெயில்வே தொழிற்சங்கங்கள் தரப்பில் மதுரை ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தனியார்மயம் மத்திய அரசு, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கு ரெயில்வே தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி, மத்திய அரசு பணியாளர்கள் சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன், ரெயில்வே தொழிற்சங்கங்கள் தரப்பில் அவ்வப்போது தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரெயில்சேவை நேற்று தொடங்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் ரெயில்வே தொழிற்சங்கங்கள் தரப்பில் அந்தந்த கோட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மதுரை கோட்டத்தில், மதுரை ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மதுரை கோட்ட செயலாளர் ரபீக் பேசியதாவது:-

ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிகளில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது. மக்களின் சொத்தான, பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையை தனியாருக்கு கொடுப்பதற்கு மத்திய அரசுக்கு உரிமையில்லை. தற்போது சுற்றுலா என்ற பெயரில் கோவை-சீரடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயிலை தனியார் நிறுவனம் மூலம் இயக்குகிறது. ரெயில்வே லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம், பயணிகளின் பாதுகாப்பு, வசதிகள் பற்றி கவலைப்படாது. வழக்கமான பயணக்கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கிறது. இது ரெயில் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாரத் கவுரவ் என்ற பெயரில் நாட்டின் கவுரவத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் 100 ரெயில்களை தனியாருக்கு கொடுக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். டெல்லி-நேபாளம் இடையே இயக்கப்படும ராமாயண யாத்ரா என்ற ரெயிலை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்துக்கு விற்கும் முடிவை திரும்ப பெற வேண்டும்.

நவரத்னா என்று சொல்லப்படும் லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பதை நிறுத்த வேண்டும். லாபத்தில் இயங்கும் 100-க்கும் மேற்பட்ட ரெயில் வழித்தடங்களை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும். பண மதிப்பு கூட்டல் என்ற பெயரில் ரெயில்வே மற்றும் பொதுச்சொத்துக்களை விற்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் தலைமை தாங்கினார். இதில், மதுரை கோட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். டி.ஆர்.இ.யூ. ஆர்ப்பாட்டம் இதே கோரிக்கையை வலியுறுத்தி, டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் தரப்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட பொருளாளர் சரவணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தெய்வராஜ் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கணேசன், டி.ஆர்.இ.யூ. துணை பொது செயலாளர் சிவக்குமார், இணை செயலாளர் சங்கரநாராயணன் ஆகியோர் மத்திய அரசை கண்டித்தும், ரெயில்வே துறையின் நடவடிக்கைகளை கண்டித்தும் பேசினர். முடிவில், உதவி தலைவர் ஜெயராஜ சேகர் நன்றி கூறினார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: