பெட்ஸ்வீடியோஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு மாட்டுக்கு காது வெட்டலாமா ? கூடாதா ? உண்மை என்ன

Is it possible to cut off the ear of a Jallikkattu cow? Shouldn't What is true

ஹலோ மதுரை நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். இதுவைரக்கும் நம்ம சேனலை சப்ஸ்கிராபர் செய்யாதவங்க, மறக்காம செய்து ஆதரவு கொடுங்க. இந்த வீடியோவில் நாம் பார்க்கப்போவது ஜல்லிக்கட்டு மாட்டுக்கு காது அறுக்கலாமா ? கூடாதா ? என்பதைப் பற்றிதான். இது முக்கியமான வீடியோ என்பதால் புதிதாக ஜல்லிக்கட்டு மாடு வளர்க்க ஆசைப்படுபவர்கள் முழுமையாக பாருங்கள். வாங்க வீடியோவுக்குள் போவாம்.

உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் தனிச்சிறப்பு பெற்றவையே. அப்படி படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களுக்கும் அதன் உடலில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பாகமும் முக்கியமானவை. விலங்குகளுக்கும் இது கட்டாயம் பொருந்தும். அந்த பாகங்கள் ஏதாவது குறைவாக இருந்தால் அதைதான் ஒச்சம் என்கின்றோம்.

ஒச்சமான விலங்குகளை ஒதுக்கும் வழக்கம், பழங்காலத்தில் இருந்தே வருகிறது. குறிப்பாக இது… கால்நடை வளர்ப்பில் அதிகம் காணப்படுகிறது. ஒச்சமானவற்றை வாங்கி வீட்டில் வளர்க்க பெரும்பாலும் யாரும் முன்வருவதில்லை.

ஆனால், சில இடங்களில் மனிதனின் தேவைக்கும், ஆசைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப விலங்குகள் ஒச்சமாகப்படுகின்றன. அதற்கு அழகு என்று பெயர் சூட்டிக் கொள்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக சில நாய்களின் காதுகள் அறுக்கப்பட்டு, அவை நேராக வைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு அழகாகவும், கம்பீரமாகவும் தோற்றத்திற்கு அளிக்கிறது. இதற்காக இதன் காதுகள் அறுக்கப்படும் பழக்கம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

அப்படி்ததான் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கும் காது அறுக்கும் பழக்கம் வந்தது என்று ஒருபுறமும், காதுகளை அறுத்தால்தான் மாடுகள் வாடியில் 360 டிகி கோணத்தில் கண்களை உருட்டி, மிரட்டி, சுழற்றி வீரர்களை பந்தாடும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், வீரியத்தோடு விளையாடும் என்று இரு கருத்தாக சொல்லப்படுகிறது. இதில் எது உண்மை ? காது அறுப்பது நன்மையா ? தீமைாய ? சற்று விரிவாகப் பார்ப்போம்.

தென் மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய பெல்டில் ஜல்லிக்கட்டு கன்றுகளின் காதுகளை அறுக்கும் பழக்கம் இன்று வரை உள்ளது. காது அறுப்பதால் மாடு மிக எளிதாக பின்னாடி உள்ளவர்களை பார்க்கும் என்ற காரணத்திற்காகவும், பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கும் என்ற காரணத்திற்கும் இப்பகுதியில் கன்றுகளுக்கு காது அறுக்கும் பழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது. இப்பகுதியில் பெரும்பாலான ஜல்லிக்கட்டு மாடுகளின் காதுகள் அறுப்பட்ட நிலையில் இருக்கும்.

இதுவே புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய பகுதிகளில்காது அறுக்கும் பழக்கம் இல்லை சுத்தமாக இல்லை. இதை அப்பகுதியினர் ஒச்சமாக கருதுகின்றனர். காது அறுக்கப்பட்ட கன்றுகளை இவர்கள் ஒருபோதும் வாங்குவதில்லை. இங்குள்ள ஜல்லிக்கட்டு காளைகளின் காதுகள் அறுக்காமல் இருக்கும்.

ஆனால், இரண்டு பகுதிகளைச் சேர்ந்த இருவரும் அறுத்த மற்றும் அறுக்கப்பட்டாத நிலையில் உள்ள பெரிய ஜல்லிக்கட்டு மாடுகளை வாங்கும் பழக்கம் உள்ளது. அதாவது தங்களுக்கு பிடித்த பெயர்போன காளைகைள இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் வாங்கி வளர்த்து வாடியில் விடும் பழக்கம் உள்ளது.

இப்பொழுது, எப்பொழுது காது அறுக்க வேண்டும், எப்படி அறுக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். கன்றாக இருக்கும் பொழுதே. அதாவது ஆறு மாதத்தில் இருந்து ஒரு வயதிற்குள் காதினை அறுக்க வேண்டுமே தவிர, பெரிய கன்றாக வந்த பிறகு அறுக்க கூடாது. எந்த நிலையில் அறுத்தாலும் மாட்டுக்கு வலி நிச்சயமாக இருக்கும்.

காது அறுக்க முடிவு செய்துவிட்டால், கிடைமாட்டு காரர்களை வைத்து அறுப்பதே சிறந்தது. நீங்களாக அறுக்க கூடாது. அது கன்றுகளுக்கு ஆபத்தாக முடிய அதிக வாய்ப்புள்ளது. முக்கியமாக எந்த மாதத்தில் காது அறுக்கலாம் என்றால், அது உங்கள் பகுதியின் சூழ்நிலையை பொறுத்தது, குளிர் காலமா ? அல்லது வெயில் காலமா ? என்றால் ஈக்கள் அதிகம் இல்லாத மாதத்தில் வெட்டுவது சிறந்தது.

பனிக்காலத்தில் ஈக்கள் தொல்லை குறைவாக இருக்கும் காரணத்தால் பலரும் இந்த மாதத்தை தேர்வு செய்கின்றனர். வெளியில் காலம் எனில் உங்கள் பகுதியில் ஈக்கள் தொல்லை அதிகம் இருக்காது என்றால் வெட்டலாம்.

காதுகளை மூன்று வடிவில் அறுக்கும் பழக்கம் உள்ளது. ஒன்று ஒட்ட அறுப்பது, இரண்டு அரைவாசி அறுப்பது, மூன்றாவது கால்வாசி அறுப்பது. அவரவர் விருப்படி அறுக்கின்றனர். ஆனால் கால்வாசி மட்டுமே காதுகளை அறுப்பது நல்லது. ஏனெனில் காதுகளில் ஈ, பூச்சிகள் அமரும்போது, அதை காதால் ஆட்டி விரட்ட முடியும். மற்றபடி அரைவாசியோ, ஒட்டவோ நறுக்கினால், அதை செய்ய முடியாது.

நறுக்கியவுடன் மருந்தாக சாம்பல் பூசப்படுகிறது. சிலர் மஞ்சள், எண்ணெய் கலந்து தடவி விடுகின்றனர். இரண்டுமே நல்லதுதான். முதல் கட்டமாக சாம்பல் வைப்பதுதான் நல்லது. அதன் பிறகு மூன்று நாட்களுக்கு பிறகு மூஞ்சள் எண்ணெய் கலந்து தேய்த்துவிடலாம். தொடர்ச்சியாக அறுக்கப்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வந்தால்,கால்நடை மருத்துவரை அணுகுவது நல்லது.

காது அறுப்பவர்களை பொறுத்து காது புண் ஆறும். இரண்டு நாட்களில் புண் ஆறிய கன்றுகளும் உண்டு. இந்த சமயத்தில் காதில் பூச்சிகள், ஈக்கள் மற்றும் எறும்புகள் நெருங்காத வகையில் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். மற்றபடி கூடுதலாக எந்த மருத்துவமும் தேவையில்லை.

சரி, இப்பொழுது முக்கியமான விசயத்திற்கு வருமோம். ஜல்லிக்கட்டு மாட்டிற்கு காது அறுப்பது அவசியமா ? இல்லையா ? என்று கேட்டால் நிச்சயமாக அவசியம் இல்லை என்பதே உண்மை. ஏனெனில் காளை என்பதை தனித்து காட்ட வேண்டும் என்பதற்காகவே அதன் காதுகள் நறுக்கப்படுகிறன்றன. இல்லை என்றால் பார்பதற்கு கம்பீரம் இல்லாமல் பசுபோல் இருக்கும் என்பதே காது அறுப்பதற்கான உண்மை நிலை.

இயற்கை ரீதியாகவோ ? மருத்துவ ரீதியாகவோ பார்த்தால் மாடுகளுக்கு காது அறுப்பதால் எந்த பலனும் இல்லை. சிக்கல்கள் மட்டுமே உள்ளது. காதுகளை அறுப்பதால், பூச்சி, ஈக்கள் போன்றவற்றை எளிதாக விரட்ட முடியாது. மழை காலங்களில் காதுகளுக்குள் தண்ணீர், பனிக்காற்று மிக எளிதாக இறங்கிவிடும்.

இதனால் மாடுகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். முக்கியமாக காதுகள் சோர்வுடன் அசைவில்லாமல் தொங்கி காணப்பட்டால் அது நோய்க்கான அறிகுறி என்பதை தெரிந்து கொள்ளலாம். இதுவே ஒட்ட காது நறுக்கப்பட்ட மாடுகளிடம் காண முடியாது. இதுமட்டும்தான் பிரச்சனையா என்றால் இன்னும் ஏராளம் உண்டு. அது மாட்டிற்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

சரி, கிடைமாட்டு காரர்கள் கன்றுகளுக்கு காது அறுக்கிறார்களே என்ற கேள்விக்கும் பதில் உண்டு. அவர்கள் பலரிடன் மாடுகள் மேய்ச்சலுக்கு ஒன்றாக இருக்கும். அடையாளம் காண்பதற்காக காதுகளை அறுக்கும் வழக்கம் உண்டு. அப்படியே அறுத்தாலும் கால்வாசி மட்டுமே அறுப்பார்கள். முக்கியமாக காளை கன்றுகளுக்கு அவர்கள் அறுப்பதில்லை.

காதை நறுக்குவதால், மாட்டின் கண்கள் 360 டிகிரி சுழன்று, வாடியில் பின்னாடி இருப்பவர்களை மிக எளிதாக பார்த்து இடஞ்சல் இல்லாமல் விளையாட வசதியாக இருக்கும் என்பதே பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது.

இது முற்றிலும் தவறு. சாதாரணமாக மாடுகள் சுற்றுப்புற சூழ்நிலைக்கேற்ப அனைத்து பக்கங்களிலும் காதுகளை திருப்ப முடியும். அதே வேகத்தில் கண்களையும் மிக லாவகமாக சுழற்றி பார்த்துக் கொள்ளும். இயற்கையாகவே இந்த திறன் அனைத்து மாடுகளுக்கும் உண்டு.

அது எப்படி என்று நீங்கள் கேட்டால் ? களத்தில் பெயர் வாங்கிக் கொடுத்த பல மாடுகளுக்கு அதன் காது நறுக்கப்பட வில்லை என்பதே உண்மை. இந்த விசயத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை பெல்ட்டில் உள்ளவர்களை பாராட்டியே தீர வேண்டும். கம்பீரம் என்பது பார்வையில் இல்லை. செயலில் உள்ளது என்பதை புரிந்தால் இயற்கைக்கு மாறாக நாம் எந்த செயலையும் செய்ய மாட்டோம்.

மாடுகளுக்கு காது நறுக்கினால் மட்டுமே கம்பீரம், வீரமாக விளையாடும், 360 டிகிரி கண்களை சுழட்டி மிரட்டும் என்தெல்லாம் உண்மை இல்லை என்பதை தெரிந்து கொண்டு, அடுத்த தலைமுறைகள் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு காது அறுப்பதை தவிர்த்து வந்தால் இயற்கை வாழ்த்தும்.

அதுவே மாடுகள் மீது நாம் காட்டும் பேரன்பும் என்ற தகவலுடன் வேறு ஒரு மாடு பற்றிய சிறப்பான தகவலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்த விடைபெறுவது ஹலோ மதுரை ரமேஷ் நன்றி வணக்கம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: