ஜல்லிக்கட்டில் எருமை மாடுகள் பங்கேற்க அனுமதி; மதுரை கலெக்டருக்கு எதிராக சுவரொட்டி
Madurai Collector News

ஜல்லிக்கட்டு போட்டியில் கலப்பின மாடுகள், எருமை மாடுகள் பங்கேற்க அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி என மaதுரை முழுவதும் சர்ச்சைக்குரிய வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலப்பின மாடுகளையும், எருமை மாடுகளையும் போட்டியில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கு அனுமதியளித்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கூறும் வகையில், மதுரை மாநகர் முழுவதும் எருமை மாட்டின் புகைப்படத்தை அச்சிட்டு சர்ச்சைக்குரிய வகையிலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக நேற்று மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் ஜல்லிக்கட்டு கமிட்டியினர், மாடு வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு வீரர்கள் சார்பில் கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதி அளிக்கக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு, எந்த மாடாக இருந்தாலும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆட்சியரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த மாணவர்களை அவமானப்படுத்தும் வகையில் கலப்பின மாடுகளையும், எருமை மாடுகளையும் ஜல்லிக்கட்டில் அவிழ்க்க கூறிய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நன்றி என மதுரையை சேர்ந்த ஆண்டவர் ராஜ் என்பவர் நூதன முறையில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.