
திமுக அரசை கண்டித்தும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், ஜூலை 5ஆம் தேதி தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என, அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று பாஜகவினர் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை பழங்காநத்தம் பகுதியில் பாஜக மதுரை மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில், பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் வணங்காமுடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பாஜகவின் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வணங்காமுடி செய்தியாளர்களிடம் பேசும் போது, மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில், இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
விடியல் அரசு என்று சொல்லி மக்களின் விடியா அரசாக இருக்கும் திமுக அரசை கண்டித்தும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மனசாட்சி இல்லாத ஸ்டாலின் அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மதுவிலக்கை ரத்து செய்யவில்லை, இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தற்போது வரை வழங்கவில்லை, பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்றார்கள் அதுவும் இல்லை, ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்களுக்கு 25,000 இன்னும் வழங்கவில்லை எனவும், மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டோம் என்று மன உறுத்தல் இல்லாமல் மனசாட்சி இல்லாமல் ஆட்சி செய்யும் ஸ்டாலின் அரசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.
மேலும், அவர் பேசுகையில் உடனடியாக ஸ்டாலின் பதவியை விட்டு விலக வேண்டும் என்று தெரிவித்தார்.