
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து (16.08.2022) காணொலிக்காட்சி மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பாக மாநில அளவில் 16 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 55 தரம் உயர்த்தப்பட்ட மின்மாற்றிகளை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இதில் மதுரை மாவட்டம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சின்னக்கட்டளை கிராமத்தில் செயல்பட்டு வரும் 110/33-11 கி.வோ துணை மின் நிலையத்தில் ரூ.2.41 கோடி மதிப்பீட்டில் 25 MVA திறன் கொண்ட கூடுதல் மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சின்னக்கட்டளை துணை மின் நிலையத்தில் இருந்து மங்கல்ரேவ் மின்பாதை மற்றும் 33 கி.வோ பேரையூர் மின்பாதை செல்கிறது. புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள கூடுதல் மின்மாற்றியின் மூலம் மின்னழுத்த குறைபாடுகளை சீர் செய்திடவும், கூடுதல் மின் தேவையை பூர்த்தி செய்திடவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் மூலம் மங்கல்ரேவ், பேரையூர், சாப்டூர், கோட்டைபட்டி, தொட்டனம்பட்டி, சலுப்பட்டி, குடிசேரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் சின்னக்கட்டளை துணை மின் நிலையத்தில் 25 MVA திறன் கொண்ட கூடுதல் மின்மாற்றியை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்ததை அடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் சின்னக்கட்டளை துணை மின் நிலையத்தில் குத்துவிளக்கேற்றி புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள மின்மாற்றியின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.
இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன், செயற்பொறியாளர் அழகு மணிமாறன், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஜெயச்சந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.