
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். வைகாசி மாத பௌர்ணமி பூஜைகளுக்காக கடந்த 3 நாட்களில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று பௌர்ணமி நாளில், சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்திருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று ஆனி மாதப்பிறப்பு நாள் என்பதால், ஏராளமான பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்குச் செல்லும் வழியில் நீரோடைகளில் தண்ணீர் வரத்து இருப்பதால், பக்தர்கள் யாரும் நீரோடைகளில் குளிக்க வேண்டாம் என்றும், நீரோடை பகுதிகளை கவனமாக கடந்து செல்லுமாறும் வனத்துறை ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.