ஆன்மீகம்செய்திகள்

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா | மலைக்கு செல்ல காலை 5.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே அனுமதி

Chathuragiri Aadi Amavasai Festival | Access to the hill is allowed only from 5.00 am to 3.00 pm

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (21.07.2022) மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஸ் சேகர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் தெரிவிக்கையில்:-

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், இந்த ஆண்டு வருகின்ற 28.07.2022-ஆம் தேதியன்று ஆடி அமாவாசை திருவிழா நடைபெறவுள்ளது.

இத்திருவிழாவிற்காக 26.07.2022 முதல் 29.07.2022 வரை சுவாமி தரிசனம் செய்ய இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ளதால், பக்தர்கள் பிரதி தினமும் காலை 5.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மலை மீது ஏறி இறங்க அனுமதிப்பதுடன் மேற்படி விழா சிறப்பாக நடைபெற துறைவாரியாக மாவட்ட நிரிவாகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து (21.07.2022) நடைபெற்ற இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சதுரகிரி மலையடிவாரமான தாணிப்பாறையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக சுமார் 15 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உபயோகப்படுத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாணிப்பாறை மலையடிவாரத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விடத்திலிருந்து தாணிப்பாறை மலையடிவாரப் பகுதிக்கு பக்தர்கள் சென்றுவர குறுகிய தூரப் பேருந்துகள் (Shuttle Service) இயக்கப்படவுள்ளதால், மேற்படி பேருந்துகள் மலையடிவாரப் பகுதிக்கு சென்று திரும்ப தனித்தனி பாதை வசதி அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மலையடிவாரப் பகுதியிலிருந்து மலைக்கு செல்ல காலை 5.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே அனுமதித்திட முடிவு செய்யப்பட்டது.

தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து மலையடிவாரப் பகுதிக்கு செல்லும் குறுகிய தூரப் பேருந்துகளுக்கான பயணச் சீட்டுகள் பெற்றுக்கொள்ள மூன்று இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், விருதுநகர் மாவட்ட காவல் துறையின் சார்பில் 800 நபர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 50 வாக்கி டாக்கிகள், வில்போன் மற்றும் ஹாம் ரேடியோ வசதிகள் பயன்படுத்திட தயார் நிலையில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மலையடிவாரத்திலிருந்து திருக்கோவில் வரை பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போதிய அளவில் காவலர்கள் நியமனம் செய்து, மலைப்பாதைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் பக்தர்களுக்கு உதவ காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சாரந்த 2,000 காவலர்கள் பக்தர்களுக்கு உரிய தகவல்களை வழங்குவதற்கு ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் சார்பில் 2,00,000 லிட்டர் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உதவி ஆணையாளர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாணிப்பாறையிலிருந்து திருக்கோவில் வரையுள்ள மலைப்பாதைகளில் போதுமான மின்விளக்குகள் மற்றும் சூரியசக்தி விளக்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும், கழிப்பறை வசதி உள்ளிட்ட இதர அடிப்படை வசதிகளை சிறந்த முறையில் செய்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், திருக்கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக அபாய ஒலிக் கருவி (Siren Alarm), வாக்கி டாக்கிகள் 10 (Walkie Talkie), வில் போன்கள் மற்றும் மின்சுற்று தொலைக்காட்சி (CCTV) பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக 50 துப்புரவு பணியாளர்கள் மற்றும் 07 துப்புரவு ஆய்வாளர்கள் இந்து அறநிலையத் துறையினரால் நிறுவப்படவுள்ள 100 குப்பை சேகரிக்கும் கூடைகளில் சேகரம் செய்யப்படும் குப்பைகள் மற்றும் திருக்கோவில், மலைப்பகுதிகள் மற்றும் திருக்கோவிலுக்குச் செல்லும் வழிகளில் பொதுமக்களால் கைவிடப்படும் குப்பைகளை உடனுக்குடன் சேகரம் செய்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்துறையின் சார்பில் மொத்தம் 8 மருத்தவக் குழுக்கள் அமைப்பதென்று முடிவு செய்யப்பட்டது. அவற்றில் 3 குழுவானது தாணிப்பாறையிலும் 5 குழுக்கள் மலையில் பக்தர்கள் நடந்து செல்லும் வழியிலும் திருக்கோவிலிலும் முகாம் அமைத்து தங்கிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மதுரை மற்றும் விருதுநகர் சுகாதாரத்துறையின் சார்பில் 108 ஆம்புலன்ஸ் வசதிகளும், 2 நகரும் மருத்துவமனையும் (Mobile Ambulance) 2 இருசக்கர ஆம்புலன்ஸ்ம் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது என மதுரை மாவட்ட மருத்துவப் பணிகள்த்துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறைந்தது 30 மருத்துவக்குழுக்களை அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில் மொத்தம் 7 தீயணைப்பு வாகனங்களம் 25 கமாண்டோ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், தீயணைப்பு வாகனங்களில் 4 வாகனங்கள் தாணிப்பாறையிலும், 2 வாகனங்கள் வாழைத்தோப்பு பகுதியிலும், 1 வாகனம் வத்திராயிருப்பிலும் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் வனத்துறையின் சார்பில் தாணிப்பாறை மலையடிவாரத்திலிருந்து திருக்கோவிலுக்குச் செல்லும் சுமார் 5.5 கி.மீ தூரமுள்ள பாதை வனத்துறையினரால் மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. வருவாய்த்துறை சார்பாக தாணிப்பாறை, வாழைத்தோப்பு மற்றும் திருக்கோவில் மற்றும் இதர இடங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிர்வாக நடுவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், திருக்கோவிலுக்குச் செல்லும் மலைப் பாதைகள் மற்றும் திருக்கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை செய்து ஆலையத் தூய்மை காத்திடும் பொருட்டு தேசிய மாணவர் படை (NCC) மற்றும் நாட்டு நலப் பணிகள் திட்டத்தை (NSS) சேர்ந்த 100 மாணவர்களை தேர்வு செய்து ஈடுபடுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், கோட்டாட்சியர் (உசிலம்பட்டி) நடராஜன் மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: