
மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், கோவில் பாப்பாகுடி ஊராட்சியில் (02.09.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் ”நம்ம ஊரு சூப்பரு” திட்டப் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆய்வு செய்தார்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்ததாவது:-
சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சுகாதாரமான வாழ்வியல் முறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசு ”நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது.
இத்திட்டமானது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடைசெய்தல், சுத்தம், சுகாதாரமான முறைகளை பின்பற்றுவது, வெளியிடங்களில் மலம் கழித்தலை தவிர்த்தல், குப்பைகளை தரம் பிரித்தல், பொது இடங்கள், அரசு கட்டடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் சுகாதாரமான முறையில் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட 5 அடிப்படை தகவல்களை முன்னிருத்தி ”நம்ம ஊரு சூப்பரு” என்ற திட்டம் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த ”நம்ம ஊரு சூப்பரு” என்ற திட்டத்தை மக்கள் இயக்கமாக கொண்டுவருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு செயல்படுத்தும் எந்தவொரு திட்டமானாலும் பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே அத்திட்டம் முழுமையான வெற்றி பெறும்.
அந்த வகையில், பொதுமக்கள் தாமாக முன்வந்து இத்திட்டத்தின் கீழ் தங்களது கிராம சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்திடவும், நமது ஊரின் பெருமைகளை எடுத்துக்காட்டும் விதமாக ”நம்ம ஊரு சூப்பரு” என்ற திட்டமானது வடிவமைக்கட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுற்றுப்புற தூய்மை குறித்த உறுதிமொழியினை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது, கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) செ.சரவணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அரவிந்த் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.