
நாடு முழுவதும் தற்போது கோவிட்-19 நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கோவிட்-19 நோய் தொற்று பரவலை கட்டுபடுத்தும் விதமாக 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 31-வது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக கோவிட் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை கோவிட் தடுப்பூசி இதுவரை போடாதவர்களுக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவு பெற்ற 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக வருகிற 10.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நமது மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 2,415 மையங்களில் 1,055 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டும்.
மேலும் நகர் பகுதிகளில் 1,000 மையங்களில் 600 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டும் ஆக மொத்தம் 3,415 மையங்களில் 1,655 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டு சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம் காலை 07.00 முதல் மாலை 07.00 மணி வரை அனைத்து வாக்குசாவடி மையங்கள் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு தடுப்பூசி செலுத்தும் சுகாதாரபணியாளர்களும் இரண்டு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்துவார்கள். மதுரை மாவட்டத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்கள் 4,01,707 – (ஊரக பகுதிகளில் – 1,65,740 நபர்கள், மாநகர பகுதிகளில் – 2,35,967) உள்ளனர்.
எனவே இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறார்கள். நமது மாவட்டத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் முடிவுற்றவர்கள் 1,90,859 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முன்னதாக இது குறித்து மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சம்மந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களும் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று பணிபுரியவும் ரோட்டரி மற்றும் லையன்ஸ் கிளப் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பள்ளி, கல்லூரி NCC, NSS மாணவர்களை கொண்டு பொது மக்களிடம் தகுந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்களையும் இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போடாத பயனாளிகளை கண்டறிந்து அவர்களை தொடர்புகொண்டு தடுப்பூசி செலுத்திட மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், கூட்டமான இடங்களில் சமூக இடைவேளி கடைபிடித்தல், முககவசம் அணிதல் மற்றும் பொது இடங்களுக்கு சென்று வீடு திரும்பிய பின் முறையாக கைகழுவுதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றி கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மதுரை மாவட்ட மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.