
மதுரை மாநகராட்சி பகுதிகளில்பெய்த கனமழையினால் கோசாக்குளம் கண்மாய், முடக்காத்தான் கண்மாய் நிரம்பி மழைநீர் செல்வதை ஆணையாளர் ச.விசாகன் (07.01.2021) ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக பனங்காடி, குலமங்கலம், எஸ்.ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் கோசாகுளம் வாய்க்கால் வழியாக சென்று கோசாக்குளம் கண்மாய், முடக்காத்தான் கண்மாய், செல்லூர் கண்மாய் நிறைந்து பந்தல்குடி வாய்க்கால் வழியாக வைகை ஆற்றில் கலக்கிறது.
இவற்றில் கோசாக்குளம் வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் சென்ற காரணத்தினால் எஸ்.ஆலங்குளம் பகுதியான ராமலிங்கம் நகர், தாய் மூகாம்பிகை நகர், கிருஷ்ணா நகர், ராயல் குடியிருப்போர் நலச்சங்கம் ஆகிய பகுதிகளில் மழைநீர் புகாதவாறு கோசாக்குளம் வாய்க்காலில் உள்ள சிறுபாலங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புக்களை உடனடியாக அகற்றுமாறும், வாய்க்காலில் எங்கும் உடைப்பு ஏற்படாமல் மணல் மூடைகளை கொண்டு தடுப்புகள் அமைக்க தயாராக இருக்குமாறும் கூறினார். மேலும் கோசாக்குளம் கண்மாய், முடக்காத்தான் கண்மாய், செல்லூர் கண்மாய்களில் இருந்து செல்லும் தண்ணீர் குடியிருப்புக்களில் புகாதவாறு கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் குழந்தைவேலு, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், உதவிப்பொறியாளர் மணியன், சுகாதார ஆய்வாளர் முரளிதரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.